விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் தணிக்கைக் குழுவின் (CBFC) நெருக்கடிகளால் ரிலீஸ் ஆவதில் சிக்கலைச் சந்தித்துள்ளது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், படத்தின் நாயகனும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்னும் வாய் திறக்காமல் இருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இது குறித்துப் பேசியுள்ள சிபிஎம் செயலாளர் சண்முகம், “கருத்துரிமைக்காக மற்றவர்கள் போராடிக் கொண்டிருக்கும் போது, சம்பந்தப்பட்ட நாயகன் மௌனமாக இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என்று கூறியுள்ளார்.
மத்திய அரசின் நிர்ப்பந்தத்தால் விஜய் வளைக்கப்படுகிறாரா? அல்லது பின்விளைவுகளுக்கு அஞ்சி அவர் அமைதியாக இருக்கிறாரா? என்ற கேள்வியைச் சண்முகம் முன்வைத்துள்ளார்.
தணிக்கைக் குழுவில் பெரும்பான்மையானோர் சான்றிதழ் வழங்கலாம் எனச் சொன்ன பிறகும், ஒரு தனி நபரின் புகாரை ஏற்றுப் படத்தை முடக்குவது சினிமா துறைக்கே ஆபத்தானது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
விஜய்யின் அரசியல் வருகைக்கும், இந்தத் தணிக்கை விவகாரத்திற்கும் தொடர்பு இருக்குமோ என்ற ரீதியில் சண்முகத்தின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.