சபரிமலை ஐயப்பன் கோயில் வளாகத்தில் இருந்த விலைமதிப்பற்ற தங்க ஆபரணங்கள் மற்றும் பொருட்கள் காணாமல் போன விவகாரத்தில், கோயிலின் தலைமை தந்திரி கண்டரரு ராஜீவருவை கேரளா காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் வெள்ளிக்கிழமை கைது செய்து மேலும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், சபரிமலை கோயில் கருவூலத்திலிருந்து தங்க நகைகள் திருடப்பட்ட புகார் எழுந்ததைத் தொடர்ந்து தீவிர விசாரணை தொடங்கப்பட்டது.
இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான உன்னிகிருஷ்ணன் போற்றி மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் முன்னாள் தலைவர் பத்மகுமார் ஆகியோர் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையும் நடவடிக்கையும் இதுவரை
சிறப்புப் புலனாய்வு குழுவின் கண்டுபிடிப்புகளின்படி, தந்திரி ராஜீவருவுக்கும், உன்னிகிருஷ்ணன் பொட்டிக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, கருவறையின் கதவு சட்டங்கள் மற்றும் துவாரபாலகர் சிலைகளுக்குத் தங்க முலாம் பூசும் பணிகளை மேற்கொள்ள தந்திரி பரிந்துரை செய்துள்ளார்.
இந்த நடைமுறைகளின் போது முறைகேடுகள் நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
முன்னதாக, இரகசிய இடத்தில் வைத்து தந்திரியிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், பின்னர் அவரைத் தங்களது அலுவலகத்திற்கு அழைத்து சென்று கைது நடவடிக்கையை முறைப்படி பதிவு செய்தனர்.
சபரிமலை போன்ற புனிதத் தலத்தின் மிக உயரிய பொறுப்பில் உள்ள ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது ஐயப்ப பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் காணாமல் போன வழக்கில் சபரிமலை தலைமை தந்திரி கைது; விசாரணை! News First Appeared in Dhinasari Tamil