மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுவன் ஒருவன், சுமார் ஒரு டசனுக்கும் அதிகமான வளர்ப்பு நாய்களின் தாக்குதலில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்புப் பகுதி ஒன்றில் சிறுவன் நடந்து சென்றபோது, திடீரென ஒரு வீட்டிற்குள் இருந்து சீறிக்கொண்டு வந்த ஏராளமான நாய்கள் அவனைச் சூழ்ந்து கொண்டு தாக்க முயன்றன.
இந்த நடுக்கமூட்டும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. நாய்கள் தன்னை கடிக்க நெருங்கியதும், அந்தச் சிறுவன் மிகுந்த தைரியத்துடனும் சமயோசிதத்துடனும் அங்கிருந்து ஓடித் தப்பித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
“>
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் உள்ள பொது இடங்களில் இவ்வளவு அதிகமான வளர்ப்பு நாய்களைக் கவனக்குறைவாகக் கையாண்ட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் தெருக்களில் சிறுவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், வளர்ப்பு விலங்குகளை வளர்ப்பவர்கள் தகுந்த பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தற்பொழுது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, வளர்ப்பு நாய்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.