ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள மாண்டவ் கிராமத்தில், காதலர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் காணாமல் போன இந்த ஜோடியை அவர்களது பெற்றோர் பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், சனிக்கிழமை அன்று விறகு சேகரிக்க காட்டுக்குச் சென்ற கிராம மக்கள், அங்குள்ள மரம் ஒன்றில் இரண்டு சடலங்கள் தூக்கில் தொங்குவதைக் கண்டு போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். அந்த உடல்கள் சுமார் 15 நாட்கள் பழமையானவை என்பதால், அவை மிகவும் அழுகிய நிலையில் துர்நாற்றத்துடன் காணப்பட்டன.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராகக் காதலித்து வந்ததும், திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டதும் தெரியவந்தது. ஆனால், அவர்கள் இருவருமே ஒரே ‘கோத்திரத்தைச்’ சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் குடும்ப அழுத்தத்திற்கும் பயந்த காதலர்கள், வேறு வழியின்றி காட்டுப் பகுதிக்குச் சென்று தற்கொலை செய்துகொண்டதாகக் கருதப்படுகிறது. தற்போது அவர்களது உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.