“எத்தனை முறை மோடி, அமித்ஷா வந்தாலும் ஸ்டாலின் முதல்வர் ஆவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது”- சேகர்பாபு
Top Tamil News January 19, 2026 07:48 PM

சென்னை திரு.வி.க .நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் சந்திரயோகி சமாதி சாலையில் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் திருமண மண்டபம் இறுதி கட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வகையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு மண்டபங்களை கட்டி வருகிறோம். அந்த வகையில் திரு.வி.நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்திற்கு "அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகை" என முதலமைச்சர் பெயர் சூட்டியுள்ளார். ஒருநாள் மண்டபம் வாடகை 75,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் 29ம் தேதியன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார். திமுகவின் தேர்தல் அறிக்கையை ஒட்டி தான் எடப்பாடி பழனிசாமியும் அறிவித்துள்ளார். மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் தான் பொருளாதாரத்தை ஆராய்ந்து வாக்குறுதிகளை அறிவிப்பார்கள். தேர்தலில் வெற்றி பெறாதவர்கள் எதை வேண்டுமானாலும் அறிவிக்கலாம். அதை பற்றி கவலைப்படவில்லை. எங்கள் பணி மக்கள் பணி. திமுகவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வைக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். எடப்பாடி அறிவிப்புக்கு நாங்களும் கவலைப்படவில்லை, மக்களும் கவலைப்படவில்லை.

தமிழ்நாடு முதலீடுகளில் பின்னோக்கி செல்கிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி இருக்கிறார். ஆளுநரின் கொள்கையில் கோட்பாடுகள் சித்தாந்தங்கள் தமிழகத்தில் எடுபடாமல் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழகம் முன்னோக்கி தான் சென்று கொண்டிருக்கிறது. எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் பிரதமர் தமிழகம் வருவது அடிக்கடி எதிர்பார்க்கலாம். மோடி ஒருபுறம், அமித்ஷா மறுபுறம் ஒட்டுமொத்த கேபினேட்டும் தமிழகத்திற்கு படையெடுக்கும். எத்தனை படைப்யெடுப்புகள் வந்தாலும் இரும்பு மனிதராக நின்று தமிழ்நாடு முதலமைச்சர் மீண்டும் முதல்வராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது” என தெரிவித்தார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.