Health Tips: அதிக எடை அதிகரிப்பிற்குக் காரணம் சாதமா..? எடையை குறைக்க சாதத்தை தவிர்க்கலாமா?
TV9 Tamil News February 10, 2026 08:48 PM

அரிசி (Rice) இந்திய உணவின் ஒரு முக்கிய பகுதியாகும். தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் அரிசி சார்ந்த உணவுகளை மக்கள் தங்கள் அன்றாட உணவில் சேர்த்து கொள்கிறார்கள். பல்வேறு உடல் எடை (Weight Gain) அதிகரித்து விடுமோ என்று பயந்து அரிசி உட்கொள்வதை தவிர்க்கிறார்கள். இதற்கு காரணம், அரிசி உட்கொள்வது எடையை அதிகரிக்கும் என்ற பரவலான நம்பிக்கை உள்ளது. அதன்படி, அரிசி உட்கொள்வது உண்மையில் உடல் பருமனுக்கு வழிவகுக்குமா? மேலும், அரிசி நம் ஆரோக்கியத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? அதன் நுகர்வு நன்மை பயக்குமா அல்லது தீங்கு விளைவிக்குமா என்பது குறித்து இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

ALSO READ: உஷார்.. அஜீரணத்தை கொடுக்கும் உணவுகள்.. மருத்துவர் தரும் அறிவுரை என்ன?

அரிசி சாப்பிட்டால் எடை அதிகரிக்குமா?

அரிசியில் அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இவை உடலுக்கு ஆற்றலின் முக்கிய ஆதாரமாக உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட அரிசி கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாகவும், நார்ச்சத்து குறைவாகவும் உள்ளது. அரிசி கொழுப்பை உண்டாக்கும் உணவு அல்ல என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். வெள்ளை அரிசியில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால், அது விரைவாக ஜீரணமாகி பசியை ஏற்படுத்தும். அரிசியை அடிக்கடி அல்லது அதிக அளவில் சாப்பிடுவது கலோரி உட்கொள்ளலை அதிகரிக்கிறது. இது நீண்ட காலத்திற்கு எடை அதிகரிக்க வழிவகுக்கும். இருப்பினும், அரிசியை மிதமாகவும் சரியான முறையிலும் உட்கொண்டால், அது எடை அதிகரிப்பை ஏற்படுத்தாது.

அரிசியை முற்றிலும் தவிர்ப்பது நல்லதா..?

அரிசியை முற்றிலுமாக கைவிடுவது கார்போஹைட்ரேட் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும், இதனால் சோர்வு, எரிச்சல் மற்றும் குறைந்த ஆற்றல் அளவுகள் ஏற்படும். அதற்கு பதிலாக, உட்கொள்ளும் அரிசியின் அளவு மற்றும் தரத்தை கட்டுப்படுத்துவது மிகவும் நன்மை பயக்கும். உதாரணத்திற்கு ப்ரவுன் ரைஸ், ரெட் ரைஸ் அல்லது கைகுத்தல் அரிசி போன்றவற்றை எடுத்து கொள்ளலாம். இதிலுள்ள அதிகளவிலான நார்ச்சத்து வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். மேலும், இதன் நிலையான இரத்த சர்க்கரையை பராமரிக்க உதவி செய்யும்.

எடை கட்டுக்குள் வைக்க என்ன உணவை எடுக்க வேண்டும்..?

எடையை குறைக்க விரும்புவோர் உங்கள் ஒருவேளை உணவில் பாதி காய்கறிகளுடனும், கால் பங்கு புரதத்துடனும், கால் பங்கு கார்போஹைட்ரேட்டுகளுடனும் உட்கொள்வது ஊட்டச்சத்தை வழங்கி, கலோரிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. மேலும், இரவில் அதிக அளவு அரிசி சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில் இரவில் உங்கள் வளர்சிதை மாற்றம் குறைந்து, அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகள் கொழுப்பாக மாற்றப்படும்.

ALSO READ: மாரடைப்பை குறைக்கும் மகத்துவம்.. நீண்ட நாள் வாழ்வு தரும் வால்நட்ஸ்..!

அரிசி சார்ந்த உணவுகளை தவிர்ப்பதன் மூலம் மட்டுமே எடையை குறைக்க முடியாது. சரியான அளவு, வகை மற்றும் சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சியுடன் சேர்ந்து, எடையை குறைக்க மிகவும் பயனுள்ள வழிகள். எனவே, அரிசியை எதிரியாகக் கருதுவதற்குப் பதிலாக, அதை உங்கள் உணவில் புத்திசாலித்தனமாகச் சேர்த்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது நல்லது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.