இரான் தாக்குதல்களால் 'கோபத்தில்' உள்ள வளைகுடா நாடுகள் போரில் இறங்குமா?
BBC Tamil March 05, 2026 12:48 PM
Reuters துபையின் ஜெபல் அலி துறைமுகத்தில் உள்ள கப்பல் தளங்கள், இடைமறிக்கப்பட்ட ஏவுகணையின் இடிபாடுகள் காரணமாகத் தீப்பிடித்தன

வளைகுடா நாடுகள் இப்போது மத்திய கிழக்கின் சமீபத்திய போரில் முன்னணியில் உள்ளன. இதனால் அவை கோபமடைந்துள்ளன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்கு இரான் அருகிலுள்ள அரபு நாடுகள் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி பதிலடி கொடுத்துள்ளது. அந்த நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை மட்டுமின்றி, பொதுமக்கள் பகுதிகள், முக்கியமான எண்ணெய் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளையும் இலக்காகக் கொண்டு தாக்கியுள்ளது.

இதன்மூலம், பயணம், சுற்றுலா, வணிகம் ஆகியவற்றுக்குப் பாதுகாப்பான, வளமான பகுதி என்ற வளைகுடா பிராந்தியத்தின் நற்பெயரை இரான் சேதப்படுத்துகிறது. இது இந்த நாடுகளுக்கு மிகவும் முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு துறையையும் கடுமையாகப் பாதிக்கிறது.

இது அரபு அரசாங்கங்கள் விரும்பிய போர் இல்லை. அவர்கள் அதைத் தடுக்க முயன்றனர். இந்நிலையில், இரானின் இந்தத் தாக்குதல்களின் விளைவாக அவர்களும் மத்திய கிழக்கு மோதலுக்குள் மேலும் ஆழமாக இழுக்கப்படுவார்களா என்பதே இப்போது இருக்கும் முக்கியமான கேள்வி.

கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜீத் அல் அன்சாரி, "அனைத்து வரம்புகளும் ஏற்கெனவே மீறப்பட்டுவிட்டதாக" கூறினார்.

மேலும் அவர், தங்கள் நாட்டின் சுதந்திரம் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். முக்கியமான கட்டடங்கள் மற்றும் சேவைகள் மீதும், மக்கள் வசிக்கும் பகுதிகள் மீதும் தாக்குதல்கள் நடந்துள்ளதாக அவர் கூறினார். இந்தத் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதம் தெளிவாகத் தெரிவதாகவும் குறிப்பிட்டார்.

இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலளிப்பது குறித்து, நாட்டின் தலைவர்கள் அனைத்து சாத்தியமான வாய்ப்புகளையும் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார். ஆனால், இதுபோன்ற தாக்குதல்கள் புறக்கணிக்கப்படாது என்றும், இதற்குப் பதில் இல்லாமல் போகாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

பெரும்பாலான இரானிய ஏவுகணைகள் இந்தப் பகுதியில் வான் பாதுகாப்பு அமைப்புகளால் தடுத்து நிறுத்தப்படுகின்றன. ஆனால், அழிக்கப்பட்ட ஏவுகணைகளின் துண்டுகள் தரையில் விழுந்து தீப்பிடித்து மக்கள் பலியாகியுள்ளனர்.

ட்ரோன்களை நிறுத்துவது கடினம், மேலும் அவை வழக்கமாக சிறிய சேதத்தை மட்டுமே ஏற்படுத்தினாலும், அவை வர்த்தகம் மற்றும் பயணத்திற்கு இடையூறு விளைவிப்பதால் அச்சத்தையும் குழப்பத்தையும் உருவாக்குகின்றன.

இதுவே இரானின் திட்டம் போலத் தெரிகிறது. அதன் அரபு அண்டை நாடுகள் மீது அழுத்தத்தை அதிகரிப்பதன் மூலம் அவர்கள் போரை முடிவுக்குக் கொண்டு வரும் சூழலுக்கு அமெரிக்காவை தள்ள முயல்கிறது.

Reuters இங்கே படத்தில் காட்டப்பட்டுள்ள அபுதாபியைப் போல வளைகுடா நாடுகளில் உள்ள பிற நகரங்கள் ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் தாக்குதல்களைத் தாங்கும் வகையில் கட்டப்படவில்லை

பைனான்சியல் டைம்ஸின்படி, இரான் இஸ்ரேலை போலவே வளைகுடாவின் முக்கிய வர்த்தகம் மற்றும் சுற்றுலா மையமான ஐக்கிய அரபு அமீரகத்தில், கிட்டத்தட்ட அதிகளவு ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியுள்ளது.

இரான், பிராந்தியத்தின் முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு துறையையும் குறிவைக்கலாம். அது மோசமாகப் பாதிக்கப்பட்டால், அதன் விளைவாக உலகப் பொருளாதாரத்துக்குக் கடுமையான தீங்கு ஏற்படும்.

இதனால் தெஹ்ரானுக்கும் பாதிப்புகள் ஏற்படக்கூடும். இரான் வளைகுடா நாடுகளை அமெரிக்காவுக்கு நெருக்கமாகத் தள்ளக்கூடும். மேலும் அவர்கள் ஏதோவொரு வகையில் இந்தப் போரில் பங்கெடுக்கக்கூடும்.

இதுவரை, இந்த நாடுகள் இரான் மீது தாக்குதல் நடத்த தங்கள் வான்வெளி மற்றும் நிலத்தைப் பயன்படுத்த அமெரிக்காவை அனுமதிக்கவில்லை. ஆனால், அந்த நிலைமை மாறக்கூடும். ஒரு கட்டத்தில் அவர்கள் ராணுவ நடவடிக்கையில் பங்கேற்க முடிவு செய்யலாம்.

தற்போது அவர்கள் முக்கியமாகத் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதில் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால், அடுத்து என்ன நடக்கும் என்பது போர் எவ்வளவு காலம் தொடர்கிறது என்பதைப் பொறுத்தது.

இந்த மோதலில் இஸ்ரேலை ஆதரிப்பது போல சில அரபு நாடுகள் காட்டிக்கொள்ள விரும்பவில்லை.

கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் தாக்குதல்களுக்குப் பிறகு காஸாவில் மேற்கொண்ட இஸ்ரேலின் வலுவான ராணுவ நடவடிக்கைகள், அதேபோல லெபனான், சிரியா போன்ற நாடுகளில் அதன் நடவடிக்கைகள், அரபு நாடுகளுடனான அதன் உறவை மேலும் பதற்றமாக்கியுள்ளன.

ஹமாஸ் தலைவர்களைக் கொல்லும் முயற்சியில் இஸ்ரேல் கடந்த ஆண்டு கத்தார் மீது குண்டு வீசியபோது பல அரபுத் தலைவர்கள் கோபமடைந்தனர்.

இருப்பினும், இரானின் சமீபத்திய தாக்குதல்கள் வளைகுடா நாடுகளை நெருக்கமாகக் கொண்டு வந்துள்ளன. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் ஆறு உறுப்பினர்களான, சௌதி அரேபியா, குவைத், கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகியவை, ஞாயிற்றுக்கிழமையன்று அவசரக் கூட்டத்தை நடத்தினர்.

அவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவை வெளிப்படுத்தினர். அதோடு தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் சாத்தியக்கூறு உள்பட, அவர்களின் பாதுகாப்பு, நிலம், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக உறுதியளித்தனர்.

ஐக்கிய அரபு அமீரக அதிபரின் மூத்த ராஜீய ஆலோசகரான அன்வர் கர்காஷ், இரான் புத்திசாலித்தனமாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு செய்தியில், "இரானின் போர் அதன் அண்டை நாடுகளுடன் அல்ல" என்று அவர் கூறினார். இரான் அதன் அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்தவும், அது மேலும் தனிமைப்படுத்தப்பட்டு இந்த மோதல் பெரிதாகும் முன்பாகப் பொறுப்புடன் செயல்படவும் அவர் வலியுறுத்தினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.