கம்போடியாவில் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த சுமார் 190 ஆன்லைன் மோசடி மையங்களை அந்நாட்டு அரசு அதிரடியாக மூடியுள்ளது.
சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்த நிலையில், கடந்த சில வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் 173 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அங்கு சட்டவிரோதமாகப் பணியமர்த்தப்பட்டிருந்த 11,000 தொழிலாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியட்நாம் எல்லையிலுள்ள காம்போட் பகுதியில் உள்ள ஒரு பிரம்மாண்ட வளாகத்தை அதிகாரிகள் ஊடகங்களுக்கு காட்டினர். அங்கு போலி இந்திய காவல் நிலையம் போன்ற செட்கள், அதில் மகாத்மா காந்தி போட்டோ, கணினி நிலையங்கள் மற்றும் தாய்லாந்து மக்களை எப்படி ஏமாற்றுவது என்பது குறித்த வழிகாட்டுதல் ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த மையங்களில் பணியாற்றியவர்களில் பலர் ஆள் கடத்தல் மூலம் கட்டாயப்படுத்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் மாதம் தாய்லாந்துடனான எல்லை மோதலின்போது சில வளாகங்கள் குண்டு வீசி தகர்க்கப்பட்டன. தற்போது கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர்கள் மூலம் இந்த மோசடி வலைப்பின்னலை முழுமையாக ஒடுக்க கம்போடியா முயற்சித்து வருகிறது.
Edited by Siva