“எல்லாம் மோடி தந்த திட்டம்.. ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் ஸ்டாலின் வேலை!” அடுக்கடுக்கான புகார்களை அடுக்கிய வானதி சீனிவாசன்.. திணறும் திமுக..!!
SeithiSolai Tamil March 03, 2026 10:48 AM

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டதால், கண்ணில் தென்படுபவர்களையெல்லாம் கட்சியில் சேர்த்து வருவதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திமுக அரசு செய்ததாகக் கூறப்படும் 4,000 கோயில் கும்பாபிஷேகங்கள் உண்மையில் பக்தர்களின் பணத்தில்தான் நடந்தன என்றும், அரசுப் பணத்தில் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வருவாய் இல்லாத கோயில்களில் திருப்பணி செய்ய முற்படும் பக்தர்களிடம் இந்து சமய அறநிலையத்துறை லஞ்சம் கேட்பதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், திமுக அரசு மத்திய அரசின் ‘ஜல்ஜீவன் மிஷன்’ போன்ற திட்டங்களுக்குத் தனது ஸ்டிக்கரை ஒட்டிச் சாதனையாகக் காட்டி வருவதாகவும் சாடியுள்ளார்.

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இன்னும் முடிவடையாத நிலையில், நடிகர் விஜய்யைக் காட்டி காங்கிரஸே திமுகவை மிரட்டி வருவதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பாரம்பரியமான திமுக நிர்வாகிகள் மாற்று கட்சியினரின் வருகையால் அதிருப்தியில் இருப்பதாகவும், சிறுபான்மை வாக்குகளுக்காக இந்துக்களை இழிவுபடுத்தும் செயல்கள் இந்தத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இறுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக இருப்பதாகவும், தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஆட்சி மலருவது உறுதி என்றும் அவர் தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.