தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறுவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி பாக்கியம். இவர்களுக்கு சுமதி என்ற மகளும், வேலுச்சாமி என்ற மகனும் உள்ளனர். சுப்பிரமணியனின் சொந்த ஊர், தென்காசி மாவட்டம் கண்ணாடிகுளம். அங்கு ஏற்பட்ட சில பிரச்னைகளால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணியன் குடும்பத்துடன் கயத்தாறுவில் தங்கி இளநீர் வியாபாரம் பார்த்து வந்தார். கடந்த 2023-ம் ஆண்டு சாலை விபத்தில் சுப்பிரமணியன் உயிரிழந்த நிலையில், மகன் வேலுச்சாமி மற்றும் தாயார் பாக்கியம் ஆகியோர் இளநீர் வியாபாரம் பார்த்து வந்தனர்.
கயத்தார்
கடந்த 2023-ம் ஆண்டு கண்ணாடிகுளத்தில் வசித்து வந்த முருகன் என்பவருக்கும் தனது மனைவி பேச்சியம்மாளுக்கும் திருமணம் மீறிய உறவு தொடர்ந்ததால், முருகனை அரிவாளால் வெட்டி தலையை கயத்தாறு அருகில் உள்ள அவரது மனைவியின் வீட்டில் வீசிச் சென்றார், வேலுச்சாமி. இந்த கொலை வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றுவந்த வேலுச்சாமி, கயத்தாறுவில் வாடகை வீட்டில் தாயாருடன் வசித்து வந்தார்.
வேலுச்சாமிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், அடிக்கடி தாயாரிடம் மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்வாராம். இந்த நிலையில், நேற்று இரவு மீண்டும் மது அருந்த பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுக்கவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த வேலுச்சாமி, தாயாரை வீட்டை விட்டு வெளியே தள்ளி கல்லால் தாக்கி அரிவாள்மனையால் கொடூரமாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார்.
பாக்கியத்தின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதற்கிடையில் தலைமறைவான வேலுச்சாமியை போலீஸார் கைது செய்தனர். “மது அருந்த அம்மாவிடம் பணம் கேட்டேன். பணம் தர மறுத்தார். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் கொலை செய்தேன்” எனச் சொல்லி போலீஸாரையே அதிர வைத்தார்.