இந்த முறை வெற்றி பெற்றால் ஹாட்ரிக்... அமைச்சரின் முயற்சி என்ன? மதுரை மக்களின் எதிர்பார்ப்பு என்ன?
அருண் சின்னதுரை March 03, 2026 06:44 PM

ஹாட்ரிக் வெற்றியை நோக்கி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்? அறிவாலயத்தில் குவிந்த விருப்ப மனு.

அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன்
 
மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் மாநில தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சராகவும் பணியாற்றி வருகின்ற அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தனக்கே உரிய தனித்த பாணியில் மதுரை மத்திய தொகுதியில் செயலாற்றி வருகிறார். ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறையும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ரேங்க் கார்டு போல தனது செயல்பாட்டு அறிக்கையை வார்டு வாரியாக வீடு வீடாக தான் செய்தனவற்றை வரிசைப்படுத்தி பொதுமக்களின் இல்லங்கள் தோறும் கொண்டு சேர்த்து வருகிறார். 2016ம் ஆண்டிலிருந்து இதனை நடைமுறைப்படுத்தி வரும் அவர் தொடர்ந்து தனது செயல்பாட்டு அறிக்கையை வழங்குவதோடு மட்டுமல்லாமல் வார்டு வாரியாக அரசு அதிகாரிகளுடன் சென்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்னைகள் குறுகிய கால பிரச்னைகள் உள்ளிட்டவற்றை வகைப்படுத்தி தீர்வு கண்டு வருகிறார்.
 
டாப் 10 வரிசையில்
 
தமிழ் இணைய கல்விக் கழகத்தில் தமிழ் டிஜிட்டல் நூலகம் மூலமாக ஒரு கோடி பார்வையாளர்களைக் கொண்ட சாதனை பக்கத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகிக்கிறார். ஐடி படித்தவர்கள் என்றாலே சென்னைக்குச் செல்ல வேண்டும் வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டும் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்ற நிலையை மாற்றி, மதுரை பாண்டிக்கோவில், வடபழஞ்சி, எல்காட் பூங்காக்களை முழுமளவில் நிறுவனங்கள் நிரம்ப செயல்படுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து சிறப்பு சேர்த்தள்ளார். இவர் மீண்டும் மதுரை மத்திய தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக செயலாற்ற வேண்டும் என்று அறிவாலயத்தில் விருப்பம் மனுக்கள் குவிந்து வருகின்றன. தான் செய்தவற்றை சொல்லி வாக்கு கேட்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரில் டாப் 10 வரிசைப்படுத்தினால் அதில் பி.டி.ஆரும் இடம் பெறுவார் என சொல்லப்படுகிறது.
 
செய்த திட்டங்கள் என்ன
 
மதுரை தத்தனேரி-செல்லூர் இடையே ரூ.9.5 கோடி மதிப்பீட்டில் 320 மீட்டர் இணைப்பு மேம்பாலம் கட்டப்பட்டதால் போக்குவரத்து சீரானது. நீண்ட நாள் கிடப்பில் இருந்த ஜெய்ஹிந்துபுரம் – டி.வி.எஸ் நகர் இடையே 251 மீட்டர் இணைப்பு மேம்பாலம் கட்டப்பட்டது. மஞ்சள் மேடு காலனி பகுதியில் 300 வீடுகள் கொண்ட குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு. சுப்பிரமணியபுரம் பகுதியில் ரூ.99 கோடி மதிப்பீட்டில் 11 தளங்கள் கொண்ட குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி குடியிருப்பு. அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட அங்கூரான் அறிவியல் கூடம். மீனாட்சியம்மன் கோயிலுக்கென சிறப்பு தீயணைப்பு நிலையம். மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் ரூ.41.96 கோடி மதிப்பீட்டில் பன்னடுக்கு வாகன நிறுத்தம்.
மீனாட்சியம்மன் கோயில் சுற்றுயுள்ள சித்திரை வீதிகளில் தேர் செல்வதற்கு ஏதுவாக மின் கம்பிகள், புதைவட கம்பிகளாக பூமிக்குள் பதிக்கப்பட்டு வருகிறது. மீனாட்சியம்மன் கோவில் சுற்றிலும் கூடுதல் கழிப்பறை வளாகங்கள். பழைமையான புதுமண்டபம் மீட்கப்பட்டு, புதிதாக குன்னத்தூர் சத்திரம் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. தீக்கிரையான மீனாட்சியம்மன் கோவில் வீரவசந்தராயர் மண்டபம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
மேலவாசல் பகுதி புணரமைக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றி ரூ.48 லட்சத்தில் புதிய தார்ச்சாலை மற்றும் தொடர் பராமரிப்பு பணிகள். அன்சாரி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன (சிறப்பு பிரசவ சிகிச்சை)ஆரம்ப சுகாதார நிலையம். அவ்வை மாநகராட்சி பள்ளி பழைய கட்டடத்தை அகற்றி புதிய பள்ளிக் கட்டிடம்.
திடீர் நகர் பகுதியில் நவீன இரண்டடுக்கு பிரம்மாண்ட சமுதாயக் கூடம். மத்திய தொகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் புணரமைப்பு பணிகள் மற்றும் 6 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை. ஆரப்பாளையம் பேருந்து நிலையம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு மேம்பாடு. ஆரப்பாளையம் வைகை ஆற்றுப் பகுதியில் நிலத்தடி நீரினை சேமிக்க புதிய தடுப்பணை. மீனாட்சியம்மன் கோயிலில் தீக்கிரையான பின் புதிதாக கட்டப்பட்டு வரும் வீர வசந்தராயர் மண்டபம்” என திட்டங்களைக் கடந்து ஹாட்ரிக் வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார் பழனிவேல் தியாகராஜன் என அரசியல் வட்டாரங்கள் சொல்கின்றனர்.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.