"பாஜக ஆட்சியில் பங்கு கேட்கவில்லை; காங்கிரஸ்தான் பங்கு கேட்கிறது”- கடம்பூர் ராஜூ
Top Tamil News March 03, 2026 07:48 PM

தமிழகத்தில் தேசியக் கட்சிகள் உள்ளே வர வாய்ப்பு இல்லை என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, “தேர்தல் நேரத்தில் தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதால் நாங்கள் டெல்லிக்கு செல்வதும் அவர்கள் இங்கு வருவதும் இது வாடிக்கையான ஒன்று. கனிமொழி கூட செல்லி செல்கிறார். அவர்களும் காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளனர். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெளிவாக பேட்டி அளித்துள்ளார். கூட்டணி குறித்து தான் பேசினோம் என கூறியுள்ளார். தற்போது கூட்டணி நேரத்தில் சில விஷயங்களை வெளிப்படையாக சொல்ல முடியாது. தேர்தலுக்கு முன்பு எந்த கட்சி பற்றியும் கணிக்க முடியாது. மக்கள் தீர்ப்பு தான் இறுதியில் தெரியும். 

தவெக உடன் காங்கிரஸ் சென்றாலும் சரி, தவெக தனியாக நின்றாலும் சரி அவர்கள் வாக்கு வாங்கி அதிமுகவை பாதிக்காது . திமுகவுக்கு மாற்று அதிமுக தான்.வருகின்ற தேர்தலிலும் அதுதான் நடக்கும். தமிழகத்தில் தேசிய கட்சிகள் உள்ளே வர வாய்ப்பு இல்லை. எங்களிடம் ஆட்சியில் பங்கு என்று குரல் வரவில்லை. அது திமுக கூட்டணியில் தான், காங்கிரஸ் தான் ஆட்சியில் பங்கு என்று கேட்கின்றனர். தவெக தலைவர் விஜயின் விவாகரத்து விஷயம் என்பது அவரது தனிப்பட்ட விஷயம். அதை அரசியலாக்குவது சரியாக இருக்காது, அதைப் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை” எனக் கூறினார்.

 
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.