ஈரான் - இஸ்ரோல் போரால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயருமா? என்று பொதுமக்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ள நிலையில், இந்தியாவில் 25 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இருப்பு உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தேவையான அளவில் இருப்பதால் தற்போதைக்கு விலையை உயர்த்தும் திட்டமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கச்சா எண்ணெய், எல்பிஜி மற்றும் எல்என்ஜியை வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவும் பதட்டங்களுக்கு மத்தியில் கச்சா எண்ணெய், எல்பிஜி மற்றும் பிற பெட்ரோலிய பொருட்களுக்கான விநியோக நிலைமை குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் பூரி பொதுத்துறை நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். நாட்டில் நிலவும் சூழ்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் முக்கிய பெட்ரோலிய பொருட்கள் கிடைப்பதையும், மலிவு விலையில் கிடைப்பதையும் உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேற்கு ஆசிய நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் முக்கிய நாடாக இந்தியா உள்ளது. உலகில் எல்பிஜி சமையல் எரிவாயு நுகர்வில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு ஏற்றிய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகத்தான் இந்தியா வர முடியும். இதனை ஈரான் மூடிவிட்டதால் எல்லாம் இந்தியா வருவது நான்காவது நாளாக தடைபட்டுள்ளது. இதனால், இந்தியாவில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு ஏற்படும். இருப்பினும், இந்தியாவில் பூமிக்கு அடியில் உள்ள கிடங்கிலும் கப்பல்களிலும் கச்சா எண்ணெய் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவை தீரும் முன்பு போர் முடிவுக்கு வந்தால் இந்தியா சிக்கலில் இருந்து தப்பிக்கலாம். ஆனால், போர் தொடர்ந்து நடந்தாலும், எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றாலும் கூட, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரக் கூடும் அபாயம் உள்ளது.