எத்திராஜ் மகளிர் கல்லூரியில், புதிய சிந்தனைகளைக் கொண்ட இளந்தலைமுறை மாணவியரைத் தொழில்முனைவோராக உருவாக்குதல் மற்றும் வளர்த்தெடுத்தலை நோக்கமாகக் கொண்ட ஸ்டார்ட் அப் மற்றும் இன்குபேஷன் மையம் (Start up & Incubation centre) திறந்து வைக்கப்பட்டது. மாணவியர் வளர்ச்சிக்கான எத்திராஜ் கல்லூரியின் முயற்சிகளில் இந்தத் தொடக்கம் குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல்லாக இருக்கின்றது.
தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்ட (TNWESAFE) இயக்குநர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப. அவர்கள் இந்த ஸ்டார்ட் அப் மற்றும் இன்குபேஷன் மையத்தைத் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு ஸ்டார்ட் அப் அமைப்பின் (TN Start up) நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான திரு. சிவராஜா ராமநாதன், நேச்சுரல்ஸ் சலூனின் இணை நிறுவனர்களான திரு.சி.கே.குமரவேல், திருமதி வீணா குமரவேல், எத்திராஜ் கல்லூரியின் நிர்வாகக் குழுத் தலைவர் திரு.வி.எம்.முரளிதரன் ஆகியோர் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் செ. உமா கௌரி வரவேற்புரை வழங்கினார்.
இந்த மையத்தின் வடிவமைப்பும், புதுமையான ஓவியங்களோடு கூடிய சூழலும், மாணவியர்க்கு உற்சாகத்தையும் துடிப்பான செயல்பாடுகளுக்கான ஊக்கத்தையும் தரும் சிந்தனையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள பெண் தொழில்முனைவோருக்குப் புதிய சிந்தனைக்கான களங்களை உருவாக்குதல், அவர்களின் முயற்சிக்கும் தொடக்கத்திற்கும் ஒத்துழைப்பு தருதல் போன்ற உகந்த சூழலையும் புதுமைகளையும் வளர்க்கும் நோக்கத்தை இம்மையம் தன் இலக்காகக் கொண்டிருக்கின்றது.
அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல், தொழில் வழிகாட்டுதலுக்கான ஆதரவளித்தல், தொழில்துறை சார்ந்த நிபுணர்களின் வழிகாட்டுதலுக்கு நெறிப்படுத்துதல், மாணவியரின் வணிக மாதிரிகளைக் கருத்தியல் ரீதியாக ஆராயவும், புதுமையான சிந்தனைகளைச் சாத்தியமான நிறுவனங்களோடு உரையாடி அவற்றுக்கான வாய்ப்புகளை, வணிகத் தொடர்புகளை உருவாக்குதல் போன்ற வாய்ப்புகளை இந்த மையம் வழங்கும்.
இந்தத் தொடக்க விழா நிகழ்வில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள், புதிய சிந்தனைகளைக் கொண்ட இளம்தலைமுறையினரோடு சிறப்பான உரையாடலை மேற்கொண்டனர். அவர்களின் படைப்பாற்றல், நிலைத்தன்மை, தீவிர கவனம், தொழில்முனைவோருக்கான சிந்தனை போன்றவற்றைச் சிறப்பு விருந்தினர்கள் பாராட்டினர். தங்களின் மதிப்புமிக்க கருத்துகளையும் அவர்களோடு பகிர்ந்து கொண்டனர்.
எத்திராஜ் ஸ்டார்ட் அப் மற்றும் இன்குபேஷன் மையம், இளம் பெண்கள் மிகத் துணிவுடன் கனவு காணவும், அவர்களின் கனவுகளை நனவாக்கும வழிகளைக் கண்டடையவும், நம்பிக்கையை உருவாக்கவுமான சிறந்த சிந்தனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையுடன் புதிய தொழில்களை உருவாக்கவும், எதிர்காலத் தொழில்முனைவோரை மேம்படுத்தவும், கல்லூரி வளாகத்திற்குள் புதுமையான தொடக்கங்களைக் கொண்டாடுவோம் என்ற பண்பாட்டைச் செழுமைப்படுத்தவுமான ஒரு பெருமை தரும் நிகழ்வாக இன்றைய தொடக்கத்தைக் குறிப்பிட வேண்டும்.