சவுதி அரேபியாவின் ராஸ் தனுரா (Ras Tanura) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஏற்பட்டுள்ள சேதங்களை உயர் ரக செயற்கைக்கோள் புகைப்படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. உலகின் மிக முக்கியமான எரிசக்தி நிலையங்களில் ஒன்றான இங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சவுதி அராம்கோ (Aramco) நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் இந்த வளாகத்தில், ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் எரிந்த தடயங்கள், மற்றும் சேதமடைந்த உள்கட்டமைப்புகளை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. பாரசீக வளைகுடா பகுதியில் அமைந்துள்ள இந்த நிலையம், சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ஏற்றுமதி வலையமைப்பின் முதுகெலும்பாகத் திகழ்கிறது.
ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்ட பெருந்தீயைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில சுத்திகரிப்பு பிரிவுகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
:இரண்டு ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டதாக சவுதி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், அவற்றின் சிதறல்கள் விழுந்ததில் "குறைந்த அளவிலான தீ" ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
ராஸ் தனுரா நிலையம் நாளொன்றுக்கு 5,50,000 பேரல்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கிறது.
இந்தத் தாக்குதலால் கச்சா எண்ணெய் விலைகள் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன. உலக எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை கையாளும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியில் நிலவும் பதற்றமே இதற்கு முக்கிய காரணமாகும்.
பாதுகாப்பு காரணங்களுக்காக சில கப்பல் நிறுவனங்கள் தங்கள் பயணங்களைக் குறைத்துள்ளன. இது உத்தியோகபூர்வமாக மூடப்படாவிட்டாலும், எரிசக்தி போக்குவரத்தில் ஒரு "மறைமுகத் தடையை" (informal bottleneck) உருவாக்கியுள்ளது.
இந்த போரானது சவுதி எல்லைகளையும் தாண்டி விரிவடைந்துள்ளது. பஹ்ரைனின் சல்மான் துறைமுகத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளவாடங்களை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கத்தாரில் அதிகாலை இரண்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (Ballistic missiles) இடைமறிக்கப்பட்டதை கத்தார் உறுதி செய்துள்ளது.
சவுதி தலைநகர் ரியாத்தில் வெடிச்சத்தங்கள் கேட்டது மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது.
துறைமுகங்கள், விமான நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் என வளைகுடா பிராந்தியம் முழுவதும் ஈரானிய ஏவுகணைகள் இலக்கு வைப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது ராஸ் தனுராவில் ஏற்பட்டுள்ள சேதங்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பழுதுபார்க்கும் கால அவகாசம் மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீதான அடுத்தடுத்த தாக்குதல்கள் குறித்த கவலை அதிகரித்துள்ளது.