கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில், கஞ்சா சாக்லெட் மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை பேரூர், கருமத்தம்பட்டி, செட்டிபாளையம், மதுக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 50 இடங்களில் ரகசிய தகவலின் அடிப்படையில் இரண்டு டி.எஸ்.பி, ஒன்பது இன்ஸ்பெக்டர், 300 காவலர்கள் தலைமையில் அதிரடி சோதனை நடைபெற்றதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
சோதனையில் சிக்கிய போதைப் பொருட்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் குறித்து பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சோதனையின் போது 22 வாகனங்கள் உரிய ஆவணங்கள் இன்றி சிக்கியதாகவும், 4.5 கிலோ கஞ்சா, 50 மில்லி கிராம் கஞ்சா ஆயில், சிந்தடிக் ட்ரக்ஸ், மெத்தபெட்டமைன், கஞ்சா சாக்லேட் இரண்டு கிலோ அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இந்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், 18 பேரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
சிக்கிய 5 பேரில், 2 பேர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் , இரண்டு பேர் கல்லூரி முடித்தவர்கள் என்றும் 3 பேர் கல்லூரி மாணவர்கள் என்றும் கார்த்திகேயன் தெரிவித்தார். கடந்த ஆண்டு 670 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், ஆன்லைன் மூலமாக விற்பனை செய்வதை தடுக்க முயற்சி செய்து வருtதாக தெரிவித்த கார்த்திகேயன், அனைத்து கல்லூரி மாணவர்கள் இடத்திலும் அறிவுரை வழங்கி உள்ளதாகவும், ஒரு சில மாணவர்கள் மூலம் பல்வேறு மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் எனவும் அவர்களின் வாழ்க்கையை அழிக்காதீர்கள் என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கார்த்திகேயன் தெரிவித்தார்.