செஞ்சி அருகே கோர விபத்து: கிணற்றுக்குள் கார் பாய்ந்து சென்னையைச் சேர்ந்த 4 பேர் பரிதாப உயிரிழப்பு!
சிவரஞ்சித் March 03, 2026 06:44 PM

விழுப்புரம்: செஞ்சி அருகே, கட்டுப்பாட்டை இழந்த கார் விவசாயக் கிணற்றுக்குள் பாய்ந்த விபத்தில், வழக்கறிஞர் உள்பட 4 பேர் பரிதாப உயிரிழப்பு

கார் விபத்து - 4பேர்‌ உயிரிழப்பு 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, கட்டுப்பாட்டை இழந்த கார் விவசாயக் கிணற்றுக்குள் பாய்ந்த விபத்தில், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் உள்ளிட்ட நான்கு பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை கிரிவலம் முடித்துவிட்டு வீடு திரும்பிய போது நேர்ந்த சோகம்

சென்னை குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த சேகர், ஞானவேல், ராஜா மற்றும் வழக்கறிஞர் வினோத் ஆகிய நான்கு பேரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு கிரிவலம் செல்வதற்காகச் சென்றிருந்தனர். கிரிவலத்தை முடித்துவிட்டு, மீண்டும் சென்னை நோக்கித் தங்களது காரில் திரும்பிக்கொண்டிருந்தனர்.

கிணற்றில் பாய்ந்த கார்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி - ரெட்டிபாளையம் பகுதியில் கார் வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக காரின் டயர் வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த ராமச்சந்திரன் ரெட்டியார் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றுக்குள் தலைகுப்புறப் பாய்ந்து மூழ்கியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செஞ்சி தீயணைப்புத் துறையினர், ஜேசிபி மற்றும் சிறிய கிரேன் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மீட்புப் பணியின்போது கார் பாதி தூரம் மேலே கொண்டு வரப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக கயிறு அறுந்து கார் மீண்டும் கிணற்றுக்குள் விழுந்தது. இது மீட்புப் பணியில் பெரும் தொய்வை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு கார் வெற்றிகரமாக வெளியே எடுக்கப்பட்டது.

சென்னையைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

கார் தலைகுப்புற விழுந்ததாலும், கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததாலும் காரில் இருந்தவர்களால் வெளியே வர முடியாமல் போனது. மீட்கப்பட்ட காரில் இருந்த சேகர், ஞானவேல், ராஜா மற்றும் வினோத் ஆகிய நான்கு பேரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

அவர்களது உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. உயிரிழந்தவர்களின் விவரம் அறிந்து அவர்களது குடும்பத்தினர் மற்றும் குன்றத்தூர் பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.