தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், கட்சிகள் இப்போதே வேட்பாளர் தேர்வில் மும்முரம் காட்டி வருகிறார்கள். அனைத்துக் கட்சிகளும் புது முகங்களுக்கு, இளைஞர்களுக்கு இந்த முறை வாய்ப்பு கொடுக்க நினைக்கிறது. அந்த வகையில் திமுகவிலும் இளைஞர் அணியை சேர்ந்த நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களில் அதிக பேருக்கு எம்.எல்.ஏ சீட் கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியே ரெக்கமண்ட் செய்திருக்கிறார். அதனால், திமுக இளைஞரணியினர் இந்த முறை எம்.எல்.ஏ சீட் பெற்றுவிட முயற்சித்து வருகிறார்கள்.
கடலூர் தொகுதி - திமுக எம்.எல்.ஏ சீட் யாருக்கு
அந்த வகையில், கடலூர் தொகுதியில் போட்டியிட திமுகவின் நிர்வாகிகள் பலர் போட்டிப்போட்டு வந்தாலும் அந்த தொகுதியில் இளைஞரணியை சேர்ந்த புதுமுகத்திற்கு வாய்ப்பு கொடுக்க உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால், அங்கு இளைஞரணியை சேர்ந்த நிர்வாகியை தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
அய்யப்பன் மீது அதிருப்தியில் திமுக தலைமை
கடலூர் எம்.எல்.ஏவாக இருக்கும் திமுகவை சேர்ந்த அய்யப்பன் மீது தொடக்கம் முதலே கட்சித் தலைமை கடும் அதிருப்தியில் இருந்து வருகிறது. குறிப்பாக, கடலூர் மாநகராட்சி தேர்தல் நடந்த உள்ளடி வேலையால் ஆளுங்கட்சி எம்.எல்.ஏவான அய்யப்பனை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தது திமுக. இதனால் அவருக்கு சீட் தர வாய்ப்பே இல்லை. அதன்காரணமாகவே புதிய முகத்திற்கு திமுக தலைமை வாய்ப்பு கொடுக்கவிருக்கிறது.
ரேசில் முந்தும் ஏரோனாநாடிக்கல் இன்ஜினியர் சரத்
அந்த வகையில், கடலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும் திமுக மாநகர இளைஞரணி துணை அமைப்பாளருமான சரத் பெயர் வேட்பாளர் பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பி.இ ஏரோநாட்டிக்கல் இன்ஜினியர் படித்துவிட்டு அரசியலில் உள்ள ஆர்வம் காரணமாக திமுகவில் செயல்பட்டு வரும் சரத்தை வேட்பாளர் ஆக்கினால் கடலூர் தொகுதியில் திமுகவிற்கு புத்துயிர் ஊட்டியதுபோல இருக்கும் என கருதி இளைஞரும் படித்தவருமான சரத்திற்கு எம்.எல்.ஏ சீட் கொடுக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
MRK பன்னீர்செல்வத்தின் ஆதரவில் இருக்கும் சரத்
குறிப்பாக, மாவட்ட அமைச்சரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் ஆதரவும் சரத்திற்கு இருப்பதால் கடலூர் தொகுதியில் திமுக சார்பில் சரத்தே எம்.எல்.ஏ வேட்பாளராக அறிவிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக, குறிஞ்சி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடி, பெரிய அளவில் நலத் திட்ட உதவிகளை கடலூர் தொகுதியில் செய்துள்ளதும் சரத் பெயர் கவனம் பெற முக்கிய காரணமாக இருக்கிறது.
குடந்தை பெரியாரின் பேரன் சரத்
கூடுதலாக, திராவிட சுடர் என்றும் குடந்தை பெரியார் என்றும் அழைக்கப்பட்ட திமுக மூத்த நிர்வாகியாக இருந்த கே.கே. நீலமேகத்தின் பேரன் என்ற அடையாளமும் சரத்திற்கு இருப்பதாலும் திமுகவின் அறிவுச் சுடர் திருவிழாவில் சரத்தின் தாத்தா நீலமேகத்தின் புகைப்படமும் இடம் பெற்றதாலும் அவரது திமுக குடும்ப பாரம்பரியமும் சரத்திற்கு பலமாக இருப்பதால். கடலூர் சட்டமன்ற தொகுதிக்கு திமுக வேட்பாளராக சரத்தே அறிவிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.