பதவி வெறியில் திமுக.. மிரட்டலுக்கு பணியும் காங்கிரஸ்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய அதிமுக அன்பழகன்!
சிவரஞ்சித் March 04, 2026 02:14 PM

புதுச்சேரி:  தமிழகத்திலும் புதுச்சேரியிலும் அதிகாரப் பதவி வெறியில் உள்ள திமுகவும், காங்கிரஸும் கூட்டணி அமைக்க முடியாமல் தள்ளாடுகின்றன. 15 இடங்களில் வெற்றி பெற்ற காலம்போய், தற்போது 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற திமுக, காங்கிரஸை மிரட்டி வருகிறது என அதிமுக அன்பழகன் விமர்சனம்.

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 கடந்த திமுக. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலிருந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக வக்ஃபு வாரியத்திற்கு தலைவர் மற்றும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படாமல் இருந்தனர். இதனால் முஸ்லீம் சமுதாய மக்களுடைய பல்வேறு உரிமைகள் பறிக்கப்பட்டன. அதிமுகவின் பலகட்ட தொடர் போராட்டங்கள் மற்றும் அதிமுகவின் கோரிக்கையும் ஏற்று தற்போது வக்ஃபு வாரியத்திற்கு என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த ஒருவரை தலைவராகவும், ஒரு சில நியமன உறுப்பினர்களையும் நியமித்த  முதலமைச்சர் அவர்களுக்கு அதிமுக சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வக்ஃபு வாரியத்தில் புதிய வக்ஃபு வாரிய சட்டதிருத்தப்படி இரண்டு இந்துக்கள் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் எதிர்காலத்தில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தினால் அந்த நாடுகளில் பணிபுரியும் ஒருகோடிக்கு மேற்பட்ட இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இருந்து குறிப்பாக எனது உப்பளம் தொகுதி மற்றும் வில்லியனூர் தொகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிகின்றனர். அவர்களது உயிர் பாதுகாப்பை உறுதி செய்யவும், விருப்பப்படுபவர்களை பத்திரமாக நம் தாய் நாட்டிற்கு அழைத்த வர மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நம் நாட்டு பிரதமருக்கும், வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும் கடிதம் எழுத வேண்டும்.

தேர்தல் அறிவிப்பு வெளியிட ஒரு சில தினங்களே உள்ள நிலையில் மக்கள் நலன் சார்ந்த அரசின் முந்தைய அறிவிப்புகளை உடனடியாக செயல்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும். அந்த விதத்தில் மஞ்சள் நிற ரேஷன்கார்டு வைத்துக்கொண்டு அரசின் மாதாந்திர உதவித்தொகை பெறாத குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்ற மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பு செயல்வடிவம் பெறவில்லை. தனியார் பள்ளிகளில் அட்டவணை இன பிள்ளைகளின் முழு கட்டணத்தையும் அரசும் செலுத்துவது போன்று மீனவ சமுதாய மக்களுடைய பிள்ளைகளின் கல்வி கட்டணத்தையும் அரசே செலுத்தும் என்ற மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பு இன்னும் செயல்படுத்தப்படவில்லை.

அரசு துறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தினக்கூலி ஊழியர்கள், பகுதி நேர விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும் கொரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கப்படும் என்ற அறிவிப்பு உள்ளிட்டவைகளை சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பு செயல்படுத்திட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் துணைநிலை ஆளுநர் அவர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியை பற்றி பேசுவதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு எவ்வித அறுகதையும் கிடையாது. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் அதிகார பதவி வெறியில் ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கு மேலாக கூட்டணியில் இருந்த திமுகவும், காங்கிரசும் கூட்டணி அமைக்க முடியாமல் தள்ளாடுகின்றன.

புதுச்சேரியில் 2011-ல் 7 இடங்களில் காங்கிரசும், 2 இடங்களில் திமுகவும் வெற்றிபெற்றன. அதே போன்று 2016-ல் காங்கிரஸ் 15 இடங்களிலும், திமுக 2 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது தமிழகத்தில் சுயநலமிக்க காங்கிரஸ்காரர்களை தன் வசப்படுத்திக்கொண்டு மிரட்டும் திமுக புதுச்சேரியிலும் காங்கிரசை மிரட்டிக்கொண்டு வருகிறது. 15 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்ற போது அதன் கூட்டணி கட்சியான திமுக வெறும் 2 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுவிட்டு தற்போது எங்கள் தலைமையில் தான் ஆட்சி என்று பதவி வெறியில் காங்கிரசை மிரட்டுகிறது.

இங்குள்ள திமுகவின் ஒருசில கைக்கூலி காங்கிரஸ் தலைவர்களுக்கு இந்த உண்மைகள் புரியாது. காங்கிரஸ் கட்சியின் தன்மானம் உள்ள உண்மையான தொண்டர்கள் இந்த உண்மை நிலையை உணர்ந்து இந்த தேர்தலில் திமுகவை புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.