திமுக ஆட்சியில் மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்; சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
காஞ்சிபுரம் அருள்மிகு காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நடைபெற்ற விஸ்வரூப தரிசனத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு மனமுருகி சாமி தரிசனம் செய்தார்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் மக்கள் நலம் பேணும் ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து அவர் இந்த வழிபாட்டை மேற்கொண்டார். தரிசனத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக மக்கள் தற்போதைய திமுக ஆட்சியில் அனைத்து தரப்பிலும் வஞ்சிக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டுள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
குறிப்பாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் உருப்படியான திட்டங்கள் ஏதுமில்லை என்றும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதால் மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 2026-ல் ஆட்சி மாற்றம் என்பது உறுதி என்றும், அது மக்கள் மனதின் பிரதிபலிப்பாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து கூட்டணி விவகாரங்கள் குறித்துப் பேசிய அவர், தேமுதிக-விற்கு மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டது.
அந்த கூட்டணியின் உட்பூசல் சார்ந்த விஷயம் என்றாலும், நீண்ட காலம் நாடாளுமன்றப் பணியாற்றிய வைகோ போன்றவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிட்டார். மேலும், விசிக மற்றும் மதிமுக போன்ற கட்சிகளை விட தேமுதிக-வை அவர்கள் உயர்வாகக் கருதுகிறார்களா என்ற கேள்வியையும் எழுப்பினார். இந்தியா கூட்டணி என்பது வலிமையாக இல்லை என்றும், தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்து எத்தனை கட்சிகளைக் கொண்டு வந்து சேர்த்தாலும் அவர்களின் வெற்றி என்பது கானல் நீராகவே இருக்கும் என்றும் கடம்பூர் ராஜூ தனது பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.