திருத்தணி நகராட்சியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு ‘அறிஞர் அண்ணா’ பெயரைச் சூட்டாமல், ‘கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம்’ எனப் பெயர் சூட்டியிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அங்கு அண்ணா பெயரில் பேருந்து நிலையம் இயங்கி வரும் நிலையில், தற்போது பெயர் மாற்றம் செய்வது திமுக ஆட்சியின் சர்வாதிகாரப் போக்கைக் காட்டுகிறது என்று அவர் சாடியுள்ளார்.
தன் தந்தையின் பெயருக்கு விளம்பரம் தேட விரும்பினால் திமுக அறக்கட்டளை மூலம் செய்ய வேண்டுமே தவிர, திராவிட இயக்கத் தலைவர் அண்ணாவின் பெயரைப் புறக்கணிப்பது ஒட்டுமொத்தத் தமிழகத்திற்கும் இழைக்கப்படும் அநீதி என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகள் முழுமையாக முடிவடைய இன்னும் ஒரு மாத காலம் தேவைப்படும் நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து இன்று (4.3.2026) அவசர அவசரமாகத் திறப்பு விழா நடத்துவது கண்டிக்கத்தக்கது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
போதிய வசதிகளை ஏற்படுத்தாமல் விளம்பர மோகத்தில் இப்படி அவசர கதியில் திறப்பது பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் என்றும், இனி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பதை உணர்ந்தே திமுக இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.