பணிந்தது ஈரான்?… போரை நிறுத்தத் தயார்… ஆனால் அமெரிக்காவிற்கு போட்ட பலத்த நிபந்தனை…!!!
SeithiSolai Tamil March 04, 2026 04:48 PM

மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. இது குறித்து ஈரானின் உயர்மட்டத் தலைவரின் சிறப்புப் பிரதிநிதி அப்துல் மஜீத் ஹக்கீம் இலாஹி செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், தங்களது நாட்டின் கண்ணியத்தைப் பாதிக்கும் வகையில் நிபந்தனைகளை விதிக்காமல் சமமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தினால் போரை நிறுத்தத் தயார் என்று தெரிவித்துள்ளார்.

ஈரான் எப்போதும் அமைதியையே விரும்புவதாகவும், தற்போது தற்காப்புக்காகவே பதில் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும் இந்தப் பேச்சுவார்த்தைக்கு ஈரான் முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படாது என்பதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்றும், தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை முழுமையாக நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் உலக அளவில் வல்லரசாக உருவெடுப்பதைத் தடுக்கவே அமெரிக்கா இத்தகைய மோதல்களைத் திட்டமிட்டு உருவாக்கி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்கா போரை நிறுத்த முன்வந்தால் மட்டுமே அமைதி திரும்பும் என்றும், அதுவரை ஈரான் தனது உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.