``நம் ஆட்சி அமைந்ததும்..!" - தவெக தலைவர் விஜய் கொடுத்த வாக்குறுதிகள்
Vikatan March 04, 2026 05:48 PM

தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டி பகுதியில் தவெக தலைவா் விஜய் பங்கேற்கும் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் இன்று (புதன்கிழமை - மாா்ச் 4) நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க விமானத்தில் திருச்சி வந்த விஜய், அங்கிருந்து காரில் செங்கிப்பட்டி வந்தார்.

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.

விஜய் vs ஸ்டாலின் சார்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், ``வேலூர் நிர்வாகிகள் சந்திப்பில் நான் தான் தமிழ்நாடு என்றுக் கூறியிருந்தேன், தமிழ்நாட்டு மக்களின் ஒரே உண்மையான பிரதிநிதியாக நாம்தான் இருக்கிறோம் என்பதை உணர்த்தவே. தமிழ்நாடு vs ஸ்டாலின் சார்... அதாவது விஜய் vs ஸ்டாலின்.

தவெக தலைவர் விஜய்

இது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்.. இதில் எப்படி பா.ஜ.க வந்தது எனக் கேள்வி கேட்டிருந்தேன். அதையும், விஜய் பாஜகவுக்காகப் பேசுகிறார் எனத் திரித்துப் பேசினார்கள். நம் சிறுபான்மைச் சகோதரர்களை ஏமாற்றும் வேலை இனி செய்ய முடியாது என்பதைத் தெரிந்து திரித்துப் பேசும் வேலையைச் செய்கிறார்கள்.

சென்னையில் டெல்லி டெல்லி எனப் பேசுவதும், அடித்தக் கொள்ளைக்கு ரெய்டு வந்துவிட்டால் அதே டெல்லிக்கு வெள்ளைக் கொடி பிடிப்பதும் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாட்டைக் காப்பது, பிழைக்க வைப்பது திமுக ஸ்டாலின்தான் எனப் பேசுவது வேலைக்கு ஆகாது. இப்போது சிறுவர்கள் கூட ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீய சக்தி எனச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.

TVK:``பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிதான்" - மீண்டும் அதிமுக-வை சீண்டிய தவெக!

தமிழ்நாட்டு அணி டெல்லி அணி எனப் பேசுகிறார்கள். கிரிக்கெட்டில் கூட தமிழ்நாட்டு அணியை டெல்லி அணி தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. கிரிக்கெட்டில் விசிலை போடுவது சிஎஸ்கே - வரக்கூடிய தேர்தலிலும் விசிலை போடப்போவது டிவிகே.

டெல்லி அணி மட்டுமல்லா எல்லா அணியையும் தவெக அடித்து நொறுக்கும். எனக்கும் என் மக்களுக்கும் நடுவில் யாராலும் உள்நுழைய முடியாது. இது ஒரு அம்மா - பையன். அப்பா - மகன், அண்ணன் - தம்பி, அக்கா - தம்பி உறவு. இது மற்றவர்களுக்கு தான் எலக்சன் என்னையும் என்னை நேசிக்கும் மக்களுக்கும் எமோஷன்.

ஊழலற்ற, உண்மையான, சமூக நீதியை நிலை நாட்ட, நம் ஆட்சியை அமைப்பீர்கள் என்ற உறுதி மொழியை நீங்கள் எனக்கு நீங்கள் தர வேண்டும். இந்த விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுப்பீர்கள் தானே... உண்மையிலேயே கொடுப்பீர்கள் தானே... இந்த விஜய்யை நம்புகிறீர்கள் தானே...

தஞ்சை தவெக நிர்வாகிகள் கூட்டம்

நாம் ஒவ்வொரு நாளும் சாப்பிடும் பொழுது, நமக்கே அறியாமல் விவசாயிகளுக்கு நன்றி சொல்வோம். எனக்கு அடுத்த ஜென்மத்தின் மீது நம்பிக்கை கிடையாது. அப்படி அடுத்த ஜென்மம் இருந்தால் நான் ஒரு விவசாயி குடும்பத்தில் பிறக்க வேண்டும் என விரும்புகிறேன். எனக்கு விவசாயத்தைப் பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

மற்றவர்களைப் போல நானும் டெல்டாகாரன் தான் என உங்கள் காதுகளில் டால்டா ஊத்துவதற்கு வரவில்லை. விவசாயிகளைப் பற்றித்தான் எனக்கு தெரியாது. அவர்கள் படும் கஷ்டங்கள் எனக்கு நன்றாக தெரியும்." என்றார்.

தொடர்ந்து, ``ஐநா சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், நிலத்தடி நீர் திவாலாகப் போகிறது என்ற தகவலை வெளியிட்டிருந்தது. மண்ணையும், மணலையும், மலைகளையும், கனிம வளங்களையும் கொள்ளையடித்தால் என்ன ஆகும்?

'மணல் கொள்ளையர்களுக்கு எதிராக நீங்கள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை' என சென்னை உயர் நீதிமன்றம் சொன்னதே... 'கனிமவளக் கொள்ளைகளுக்கெல்லாம் மணல் மாஃபியாதான் காரணம்' என மதுரை உயர் நீதிமன்றம் சொன்னதே.. இதையெல்லாம் மறந்துட்டீங்களா?

தவெக விஜய்

மணல் மாஃபியாக்களுக்கு ஆதரவளிப்பதே உங்கள் திமுக அரசு தானே, இதை இல்லை என்று சொல்ல முடியுமா? தண்ணீர், கனிம வளம் மட்டுமல்ல உங்கள் ஆட்சியில் தமிழ்நாடே திவாலாகப் போகிறது. கடன் வாங்கி உங்கள் அரசு கவிழ்ந்து விட்டது. விவசாயிகள் விளைவித்த நெல் மழையில் நனைந்து வீணாகிப்போனதே அதை கவனித்தீர்களா? விவசாயிகள் போராட்டத்தில் உடன் நின்றீர்களா? ஆனால் அவர்கள் போராடினால், குண்டாசில் மட்டும் கைது செய்வீர்கள். இதுதானே உங்கள் சாதனை. பரந்தூர் பிரச்சனையில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

தமிழ்நாட்டின் அனைத்து நதிகளையும் இணைப்போம் என்ற சொன்னவர்கள், அதைச் செய்தார்களா? இவர்கள் எப்பொழுதும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுபோன்ற திட்டங்களை அறிவித்துவிட்டு, தேர்தலில் தோற்றுவிடுவார்கள். அதற்கு பின்பு எங்களுடைய ஆட்சி முடிந்து விட்டதே... என சாக்கு சொல்வார்கள்.

நம்முடைய ஆட்சி அமைந்ததும் இது போன்ற பெரிய திட்டங்களை உடனே தொடங்கி, அதை ஆட்சி முடிவதற்குள் நிறைவேற்றுவதற்கு முயற்சி செய்வோம். காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சனைகளில் உன் கருத்து என்ன என கேட்பார்கள் உலக மகாமேதைகளே ஆர்.ஓ.வி மூலம் தண்ணிக்குள்ளே சென்று அணைகளின் உறுதி தன்மையை ஆராய்ந்து பார்க்கும் அளவிற்கு நானும் எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறேன்." என்றார்.

தொடர்ந்து, ``அடுத்த தேர்தலிலும் நாங்கள் தான் வெல்வோம் என சொல்வார்கள். திமுக இரண்டாவது முறை ஆட்சியைப் பிடித்ததாக சரித்திரமே இல்லை. ஆளானப்பட்ட அவர் அப்பாவாலாயே அது முடியவில்லை.

தமிழ்நாட்டின் இரண்டு கட்சிகளுக்குள் ஒரு ஒப்பந்தம் இருக்கிறது. `ஒன்று நான் ஆட்சிக்கு வர வேண்டும் அல்லது நீ ஆட்சிக்கு வர வேண்டும். நமக்குள் வேறு யாரும் வந்து விடக்கூடாது. அப்போதுதான் மக்களை இலகுவாக ஏமாற்ற முடியும். இந்த விஜய்க்கு பின்னால் மக்கள் சென்றுவிடக்கூடாது. எனவே, மக்களைப்பற்றிய பீலிங்ஸ் பற்றி நமக்கு கவலை இல்லை. நமக்கு நம்முடைய டீலிங் தான் முக்கியம். எனவே அவன் மீது நான் பழி போடுகிறேன். நீ எஸ்.ஓ.பி போட்டு தடு' எனப் பேசிக் கொள்கிறார்கள்.

இப்படி கரூரில் ஆரம்பித்து நம்முடைய ஜனநாயகன் படம் ரிலீஸ் வரை தொடர்ந்தார்கள். ஜனநாயகன் படம் தொடர்பாக நிறைய பேர் நமக்காக குரல் கொடுத்தார்கள். முதல்வரும் பட்டும் படாமல் நமக்காக குரல் கொடுத்தார். அவருக்கும் நமக்காக குரல் கொடுத்தவர்களுக்கும் நன்றி சொல்கிறேன்." என்றார்.

தொடரும், ``சமீபத்தில் நாங்குநேரியில் நடந்த அந்த சம்பவம், சட்டம் ஒழுங்கு சந்திசிரிக்கிறது என்பதின் அடையாளம்.

நம் ஆட்சி அமைந்ததும்

  • உரத் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்வோம்.

  • 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும்.

  • 5 ஏக்கருக்கு மேல் வைத்திருக்கக் கூடிய விவசாயிகள் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் கடனுக்கு 50 சதவீதம் வரை ரத்து செய்வதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம்.

  • இரண்டு ஏக்கர் வரை விவசாய நிலம் வைத்திருக்கக் கூடியவர்கள் அல்லது விவசாய நிலம் இல்லாதவர்கள் குடும்பத்தில், மாநில மத்திய அரசு ஊழியர்களாக இல்லாத பட்சத்தில், அவர்களின் குழந்தைகளின் தொழில் கல்வி முதல் அனைத்து வகை படிப்புகளுக்கான முழு செலவையும் அரசு ஏற்கும்.

  • விவசாயிகள் எதிர்க்கும் எந்த திட்டத்தையும், மத்திய அரசின் நெருக்கடியே இருந்தாலும், அந்த திட்டத்தை தவெக ஆட்சி முழுமையாக நிராகரிக்கும்.

  • கொள்முதல் நிலையங்களில் முறையாக நெல் மூட்டைகள் பாதுகாக்கப்படும். கொள்முதல் நிலையங்களில் கமிஷன் வாங்காமல் பார்த்துக் கொள்ளப்படும். கமிஷன் வாங்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

  • 500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை, பெண் விற்பனையாளருக்கு பெண் எடையாளர் - ஆண் விற்பனையாளருக்கு ஆண் எடையாளர் என நிர்ணயிக்கப்படும்.

  • ரேஷன் கடைகளில் அரிசி தவிர மற்ற அனைத்து பொருட்களும் பாக்கெட் செய்து வழங்கப்படும்.

  • மீனவர்களுக்கு மத்திய அரசு முழுமையான பாதுகாப்பு ஏற்படுத்த உணர்வு பூர்வமான அழுத்தம் கொடுக்கப்படும்.

  • கல்வி மருத்துவம் ரேஷன் அடிப்படை விஷயங்களில் அரசு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கும்." என வாக்குறுதிகளுடன் உரையை நிறைவு செய்தார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.