போர் பதற்றம்… தமிழகத்தில் முட்டை விலை திடீர் வீழ்ச்சி- பண்ணைகளில் தேக்கம்!
TV9 Tamil News March 04, 2026 04:48 PM

அமெரிக்கா- இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்து வருகிறது. இதனால், கச்சா எண்ணெய் ஒரு பேரல் 100 டாலரை நோக்கி உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் என்று அஞ்சப்படுகிறது. மேலும், பங்கு சந்தையில் வீழ்ச்சி, தங்கம் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளும் இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கோழி முட்டைகள் தேக்கம் அடைந்திருப்பதுடன் விலையும் சரிந்து வருகிறது. தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து ஐக்கிய அமீரகம், சவுதி அரேபியா ஆகிய வளைகுடா நாடுகளுக்கு ஏராளமான முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மொத்த முட்டை ஏற்றுமதியில் நாமக்கல் மாவட்டம் மட்டும் 83.42 சதவீத பங்களிப்பை அளித்து முதல் இடத்தில் இருந்து வருகிறது.

போர் காரணமாக ஏராளமான முட்டைகள் தேக்கம்

தற்போது, மத்திய கிழக்கு நாடுகளில் போர் நடைபெற்று வருவதால், அந்த நாடுகளுக்கான முட்டை ஏற்றுமதி முற்றிலுமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. இந்த கோழி முட்டைகளை, பண்ணைகளின் உரிமையாளர்கள் குளிர் பதன கிடங்கில் சேமித்து வைத்துள்ளனர். இதனால், முட்டை பவுடர் உற்பத்தியில் உரிமையாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். வெளிநாடுகளுக்கான முட்டை ஏற்றுமதி முற்றிலுமாக தடைபட்டுள்ள நிலையில், முட்டையின் விலை கடுமையாக சரிந்துள்ளது.

மேலும் படிக்க: நடுவானில் விமான பணிப்பெண்ணிடம் அத்துமீறல்.. மது போதையில் திமுக கவுன்சிலர்-வக்கீலின் ஒழுங்கீன செயல்!

ரூ.4.30- ஆக குறைந்த கோழி முட்டை விலை

இதனால், தமிழகத்தில் ஒரு முட்டையின் விலை ரூ.6- இல் இருந்து 4.30- ஆக விலை குறைந்துள்ளது. இது மட்டும் இன்றி தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் இஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பு மற்றும் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கி நடைபெற்று வருவதால், கோழி முட்டைகளின் தேவை கணிசமாக குறைந்துள்ளது. இதன் காரணமாகவும், போர் பதற்றம் காரணமாகவும் கோழி முட்டைகளின் விலை மேலும் குறையும் என்று உற்பத்தியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

முட்டை ஏற்றுமதியில் முக்கிய இடம் வகிக்கும் நாமக்கல்

கடந்த 2024- ஆம் ஆண்டு உலக அளவில் முட்டை ஏற்றுமதியில் இந்தியா 13- ஆவது இடத்தில் இருந்து வந்த நிலையில், கடந்த 2025- ஆம் ஆண்டு 2.6 சதவீத பங்களிப்புடன் 10- ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. இதற்கு தமிழகத்தில் இருந்து முட்டை ஏற்றுமதி முக்கிய பங்கு வகிக்கிறது. இதில், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் முட்டை ஏற்றுமதியில் தமிழகம் சார்பில் 91.51 சதவீத பங்களிப்பு அளிக்கப்படுகிறது. இது இந்திய மதிப்பில் ரூ.1,355.90 கோடி ஆகும். இதில், நாமக்கல் மாவட்டத்தின் முட்டை உற்பத்தி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,234.42 கோடி ஆகும்.

மேலும் படிக்க: திருநெல்வேலி இரட்டை கொலை சம்பவம்… சிறையில் இருந்து திட்டம் தீட்டியல் கும்பல்… பரபரப்பு பின்னணி!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.