தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக கூட்டணியில் தேமுதிக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் முன்னிலையில் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி, தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்பி இடம் வழங்க திமுக சம்மதித்துள்ளது. 2005-ல் கட்சி தொடங்கப்பட்ட பிறகு, முதல்முறையாக நாடாளுமன்றத்தின் மேலவைக்குச் செல்லும் வாய்ப்பு தேமுதிகவுக்குக் கிடைத்துள்ளது.
முன்னதாக அதிமுக மற்றும் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த தேமுதிக, அங்கு சரியான உடன்பாடு எட்டப்படாததால் திமுக பக்கம் திரும்பியது. கடந்த பிப்ரவரி 19-ம் தேதி பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்த போதே கூட்டணி உறுதியானது.
தற்போது ஒரு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா வேட்பாளராகக் களமிறங்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தேமுதிகவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திமுகவின் இந்த அதிரடி முடிவு, கூட்டணியில் நீண்டகாலமாக இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்களுக்கும் ராஜ்யசபா சீட் வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், புதிதாக வந்த தேமுதிகவுக்கு உடனடியாக இடம் ஒதுக்கியது அக்கட்சியினரிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இதனால் திமுக கூட்டணியில் தற்போது சலசலப்பு ஏற்பட்டுள்ளது.