"கடன் தள்ளுபடி... விவசாயிகளுக்கு விடிவெள்ளி!": விஜய்யின் 2-ம் கட்ட தேர்தல் அதிரடி வாக்குறுதிகள்!
Seithipunal Tamil March 04, 2026 09:48 PM

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) பிரசாரக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் தனது இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அதிரடியாக வெளியிட்டுள்ளார். 'மக்களுக்குப் பாகுபாடற்ற சேவை' என்பதே தனது இலக்கு என அவர் முழங்கினார்.

விவசாயிகளுக்கான மெகா திட்டங்கள்:
கடன் தள்ளுபடி: 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும். அதற்கு மேல் நிலம் உள்ளவர்களுக்கு 50% ரத்து குறித்துச் சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.

இலவச உயர்கல்வி: 2 ஏக்கருக்கும் குறைவான நிலம் கொண்ட அல்லது நிலமற்ற ஏழைக் குடும்பக் குழந்தைகளின் (அரசு ஊழியர் இல்லாத குடும்பம்) மருத்துவ மற்றும் பொறியியல் படிப்பிற்கான முழுச் செலவையும் அரசே ஏற்கும்.

நேரடி கொள்முதல்: நெல் கொள்முதலில் 'ஒரு பைசா கமிஷன்' இல்லாத நிலை உருவாக்கப்படும்; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நெல் வீணாவதைத் தடுக்கப் போதுமான கிடங்குகள் அமைக்கப்படும்.

ரேஷன் மற்றும் பொதுச் சேவை:
ஸ்மார்ட் ரேஷன்: 500 கார்டுகளுக்கு ஒரு கடை வீதம் புதிய கடைகள் அமைக்கப்படும். அரிசி தவிர மற்ற அனைத்துப் பொருட்களும் பாக்கெட் செய்யப்பட்டு விநியோகிக்கப்படும்.

வேலைவாய்ப்பு: அரசு மட்டுமின்றி, தனியார் துறையிலும் வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம் உருவாக்கப்படும்.

மத்திய அரசுக்குச் சவால்:
மத்திய அரசின் அழுத்தம் இருந்தாலும் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களைத் தவெக ஒருபோதும் அனுமதிக்காது என்று கூறிய விஜய், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவெக உண்மையான அழுத்தம் கொடுக்கும் எனத் தெரிவித்தார்.
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.