அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) திமுகவில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்பட்டாலும், திமுகவின் சில மூத்த தலைவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் இதனால் அதிருப்தி நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவை பலவீனப்படுத்தவும், திமுக கூட்டணியை வலுப்படுத்தவும் அந்தக் கட்சியில் இருந்த முக்கிய அரசியல் தலைவர்களை திமுகவில் இணைக்கும் முயற்சியை கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் திமுகவில் இணைந்தார். அவரை ஸ்டாலின் நேரடியாக வரவேற்று கட்சியில் இணைத்தது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றது.
இந்நிலையில், ஓபிஎஸுக்கு திமுகவில் வழங்கப்படவுள்ள பதவி குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. காங்கிரஸ் உடன் நடைபெற்று வரும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை, ராஜ்யசபா தேர்தல் உள்ளிட்ட விவகாரங்கள் முடிந்த பிறகே ஓபிஎஸ் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஆனால், திமுகவில் உள்ள சில சீனியர்கள் மற்றும் குறிப்பாக திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் இந்த இணைப்பை விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து கட்சித் தலைமையுடன் தொடர்புடைய அதிகார மையங்களுக்கு அவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில மூத்த நிர்வாகிகள் கூறுகையில், “திமுகவிலிருந்து பிரிந்தே அதிமுக உருவானது. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்திலிருந்தே திமுகவை எதிர்க்கும் மனநிலையில்தான் அதிமுக வளர்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அதிமுகவில் இருந்த பல முக்கியஸ்தர்களுக்கு திமுகவில் சிவப்பு கம்பளம் விரிக்கப்படுகிறது. அவர்கள் கட்சியில் சேர்ந்த பிறகு அவர்களுக்கான செல்வாக்கும் அதிகரிக்கிறது” என்றனர்.
மேலும், திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் மூலம் மட்டுமே கட்சித் தலைமையை அணுகும் கட்டுப்பாடு இருந்ததாகவும், ஆனால் அதிமுகவில் இருந்து வந்த சில முக்கிய தலைவர்கள் நேரடியாக தலைமையுடன் தொடர்பு கொள்ளும் சூழல் உருவாகிவிட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதேபோல் தேர்தல் அரசியலிலும் கட்சி பதவிகளிலும் அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், இதனால் திமுகவில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் நிர்வாகிகளின் வாய்ப்புகள் குறைகின்றன என்பதையும் அவர்கள் கவலையாக கூறுகின்றனர்.
குறிப்பாக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மற்றும் முக்கிய கட்சி பொறுப்புகள் வழங்கப்படலாம் என்ற தகவல்கள் திமுகவின் சில நிர்வாகிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அதிருப்தி தற்போது வெளிப்படையாக தெரியாமல் இருந்தாலும், தேர்தல் காலத்திலோ அல்லது அதன் பின்னரோ வெளிப்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.