சென்னை, மார்ச் 4, 2026: தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வருகிற மார்ச் 16ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், பரிசீலனை மற்றும் வாபஸ் பெறும் தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, மாநிலங்களவைத் தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சியும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.
மாநிலங்களவை தேர்தல் – அதிமுக வேட்பாளர் அறிவிப்பு:அந்த வகையில், அதிமுக தரப்பில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு (பாமக) ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணி தரப்பில் சமநிலையை பேணும் வகையிலும், எதிர்கால சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: 50-50.. அதிமுக VS திமுக.. கடும் போட்டியில் தி. நகர் சட்டமன்ற தொகுதி..
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, மார்ச் 16 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படுகிறது.
மேலும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தம்பிதுரை தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்” என குறிப்பிட்டுள்ளார்.
திமுக – மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல்:சட்டமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலங்களவைத் தேர்தலும் கட்சிகளுக்கு முக்கிய அரசியல் சோதனையாக பார்க்கப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் அடிப்படையில் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவதால், தற்போதைய எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை மற்றும் கூட்டணி பலம் முக்கிய பங்காற்றுகிறது.
மேலும் படிக்க: திமுக காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தமானது.. 28 இடங்கள் ஒதுக்கீடு..
அதேபோல், திமுக தரப்பிலும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திருச்சி சிவா மற்றும் பேராசிரியர் கான்ஸ்டன்ட் ரவீந்திரன் ஆகியோர் திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவிற்கு ஒரு இடமும், காங்கிரசுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் கூட்டணி ஒருங்கிணைப்பை திமுக வலுப்படுத்த முயற்சிக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதிமுக – திமுக:மாநிலங்களவைத் தேர்தலும், அதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலும் இணைந்து அரசியல் சூழ்நிலையை சூடுபிடிக்கச் செய்துள்ளன. தமிழகத்தில் நான்குமுனைப் போட்டி நிலவினாலும், பிரதானமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கிடையே நேரடி போட்டி கடுமையாக உள்ளது. கூட்டணி அமைப்புகள், வேட்பாளர் தேர்வு, சமூக சமன்பாடு, பிராந்திய ஆதிக்கம் போன்ற காரணிகள் வரவிருக்கும் தேர்தல்களில் தீர்மானிக்கும் அம்சங்களாக அமையும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.