கோவை மாவட்டத்தில் சாலை அருகே உள்ள ரயில்வே குடியிருப்பில், சிறுத்தை ஒன்று நடமாடுவதாக வெளியான வீடியோவால் அப்பகுதி மக்கள் பெரும் பீதி அடைந்தனர். அந்த வீடியோவில், ஒரு விலங்கு காம்பவுண்டு சுவரைத் தாவி குதிப்பது போன்ற காட்சிகள் இருந்ததால், மக்கள் அச்சமடைந்து நள்ளிரவில் சாலையில் கூடினர்.
உடனடியாக தகவல் அறிந்து போத்தனூர் போலீசாரும், வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிரமாக ஆய்வு செய்தனர். ஆனால், அங்கு சிறுத்தை நடமாடியதற்கான எந்த தடயமும் இல்லை என்பது விசாரணையில் உறுதியானது.பின்னர் அந்த வீடியோவை கூர்ந்து கவனித்த அதிகாரிகள், அது சிறுத்தை அல்ல, ஒரு பெரிய காட்டுப் பூனை என்பதை உறுதி செய்தனர்.
இந்த வீடியோவை, அதே பகுதியைச் சேர்ந்த இம்ரான் கான் என்பவர் தவறுதலாக எடுத்து வாட்ஸ்அப்பில் பகிர்ந்தது விசாரணையில் தெரியவந்தது. பணி முடிந்து வீடு திரும்பும் வழியில் காட்டுப் பூனையைப் பார்த்த அவர், அதை சிறுத்தை என தவறாக நினைத்து வீடியோ எடுத்து தனது குடும்பத்தினருக்கு அனுப்பியுள்ளார்.
அந்த வீடியோவே வதந்தியாகப் பரவியது. இம்ரான் கானை எச்சரித்த போலீசார், உறுதியில்லாத தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று அறிவுறுத்தினர்; அதன் பிறகு மக்கள் நிம்மதியுடன் வீட்டிற்குச் சென்று தூங்கினர்.