தங்கம் எல்லாம் இனி கனவுதான்! தங்கம் விலை சரிவு தற்காலிகம்தான்; விரைவில் மீண்டும் உயரும் – ஆனந்த் சீனிவாசன்
Seithipunal Tamil March 05, 2026 05:48 PM

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், இதற்கான காரணங்களைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். தற்போதைய சரிவு தற்காலிகமானது என்றும், விரைவில் தங்கம் விலை மீண்டும் உயரக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய அவர், சர்வதேச சந்தையை ஒப்பிடும்போது இந்தியாவில் தங்கம் விலை அதிகமாக குறைந்துள்ளதாக குறிப்பிட்டார். தற்போது தங்க சந்தையில் தங்கம் பற்றாக்குறை இல்லை என்றாலும், பணப்புழக்கம் குறைவாக இருப்பதே முக்கிய காரணம் என அவர் விளக்கினார்.

“தங்க சந்தையில் தற்போது கேஷ் ஃப்ளோ குறைந்துள்ளது. பலருக்கு பணம் தேவைப்படுவதால் தங்களிடம் உள்ள தங்கத்தை விற்று பணமாக்குகிறார்கள். இதனால் அறிவிக்கப்பட்ட விலையை விட சந்தையில் கிராம் ஒன்றுக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை குறைவாக தங்கம் விற்கப்படுகிறது,” என்று ஆனந்த் சீனிவாசன் கூறினார்.

மேலும் வெள்ளி விலை குறைந்து வரும் நிலையில் அதில் முதலீடு செய்யும்போது கவனம் தேவை என்றும் அவர் எச்சரித்தார். “வெள்ளி விலை குறைந்து வருவதால் அதில் முதலீடு செய்வதில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தற்போது வெள்ளியில் இருந்து வெளியேறுவது பாதுகாப்பான முடிவாக இருக்கலாம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோல் இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக வேகமாக குறைந்து வருவதாகவும் அவர் கூறினார். ரூபாய் மதிப்பு 92 ரூபாயை கடந்துள்ள நிலையில் பங்குச்சந்தையும் சரிவை சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளிலும் தற்போதைய சூழலில் சற்று கவனம் தேவை என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல் – ஈரான் இடையிலான பதற்றமும் உலக சந்தையை பாதித்து வருவதாக அவர் கூறினார். குறிப்பாக ஹார்முஸ் கடல்சந்தி வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டால் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்திலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் விளக்கினார்.

துபாய் உலக தங்க வர்த்தகத்தின் முக்கிய மையமாக இருப்பதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டால் தங்க விநியோகம் குறைந்து சந்தையில் பற்றாக்குறை உருவாகலாம் என்றும் அவர் கூறினார். அந்த சூழல் ஏற்பட்டால் தங்கம் விலை மீண்டும் வேகமாக உயரும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஹார்முஸ் கடல்சந்தி வழித்தடம் பாதிக்கப்பட்டால் கச்சா எண்ணெய் விலையும் அதிகரிக்கும். அதனால் இந்தியாவின் பொருளாதாரத்திலும் தாக்கம் ஏற்பட்டு பட்ஜெட் பற்றாக்குறை கூடும் எனவும் ஆனந்த் சீனிவாசன் எச்சரித்தார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.