இந்தியா ஒரு பரந்து விரிந்த நாடு. இங்கு மலைகள், காடுகள், பாலைவனங்கள் எனப் பல்வேறு இயற்கை அமைப்புகள் உள்ளன. இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு சாலை, நேரடியாகக் கடலில் சென்று முடிவடைகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்தச் சாலைதான் இந்தியாவின் ‘கடைசிச் சாலை’ என்று அழைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை 87-தான் அந்தச் சிறப்புமிக்க சாலையாகும். இந்தச் சாலையின் இறுதி முனை ‘அரிச்சல் முனை’ என்று அழைக்கப்படுகிறது. இங்குதான் இந்தியாவின் நிலப்பரப்பு முடிந்து, கடல் தொடங்குகிறது.
ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரம் இந்தப் பாதையில் பயணித்தால், நீங்கள் தனுஷ்கோடியின் கடற்கரையை அடையலாம். ஒரு காலத்தில் தனுஷ்கோடியில் மக்கள் வசிப்பதற்கான வீடுகளும், ரயில் நிலையமும் இருந்தன.
ஆனால், இப்போது அங்கு மக்கள் யாரும் வசிப்பதில்லை. அலைகளுக்கு இடையே நீண்ட தூரம் செல்லும் இந்தச் சாலையில் பயணிப்பது ஒரு தனித்துவமான அனுபவமாகும்.
இந்தியாவின் எல்லை முடிந்து கடல் தொடங்கும் அந்த இடத்தைப் பார்ப்பதற்காகவே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.