Getty Images
டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது இந்திய அணி.
கடைசி ஓவர் வரை பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. இதன்மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது.
இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் ரன் மழையாகப் பொழிய, மொத்தம் 499 ரன்கள் எடுக்கப்பட்டன. மொத்தம் 34 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசியது. தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்திய இந்திய அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்களைக் குவித்தது. பெரிய இலக்கை சேஸ் செய்த இங்கிலாந்து கடைசி வரை போராடி 246/7 என இன்னிங்ஸை முடித்தது.
89 ரன்கள் அடித்த சஞ்சு சாம்சன், தொடர்ந்து இரண்டாவது போட்டியாக ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
Getty Images அதிரடியைத் தொடர்ந்த சஞ்சு சாம்சன்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்த சஞ்சு சாம்சன், இந்த அறையிறுதிப் போட்டியிலும் அதைத் தொடர்ந்தார்.
இந்தப் போட்டிக்கு முன்பாக ஆர்ச்சர் vs சாம்சன் யுத்தம் அதிகம் பேசப்பட்டது. அதிவேக பந்துகளுக்கு முன்பு சாம்சன் தடுமாறியிருக்கிறார் என்பதால், ஆர்சரை சமாளிக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. ஆனால், ஆர்ச்சர் பந்துவீச்சில்தான் தன் அதிரடியைக் கட்டவிழ்த்தார் சாம்சன்.
ஆர்ச்சர் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் பவுண்டரி அடித்து தன் ரன் கணக்கைத் தொடங்கியவர், அடுத்த பந்திலேயே சிக்ஸர் அடித்தார்.
மீண்டும் மூன்றாவது ஓவரில் ஸ்டிரைக்குக்கு வந்த சாம்சன், அந்த ஓவரின் முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பினார். வில் ஜேக்ஸ் வீசிய முந்தைய ஓவரின் கடைசிப் பந்தில்தான் அபிஷேக் ஷர்மா அவுட் ஆகியிருந்தார்.
அந்த நிலையில், அடுத்த பந்தில் ஆர்ச்சர் போன்றதொரு அதிவேக பௌலரை சந்தித்தபோதும், டிஃபன்ஸிவாக ஆட நினைக்காமல் அதிரடியையே தொடர்ந்தார் சாம்சன்.
Getty Images
அந்த மூன்றாவது ஓவரில் சாம்சனின் விக்கெட்டுமே விழுந்திருக்கும். அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை இங்கிலாந்து கேப்டன் ஹேரி ப்ரூக் தவறவிட்டார்.
அதுவும் கூட சாம்சனின் நம்பிக்கையைக் குலைக்கவில்லை. இரண்டாவது பந்தில் கேட்ச் டிராப் ஆயிருந்தாலும், நான்காவது பந்திலேயே ஒரு பெரிய சிக்ஸர் அடித்தார்.
அதே ஓவரின் கடைசிப் பந்தில் ஆர்ச்சர் யார்க்கர் வீசினார். ஆனால், அதையும் மிகவும் துல்லியமாகக் கணித்து தேர்ட் மேன் திசையில் தொட்டு விட்டு பவுண்டரி அடித்தார் சாம்சன். அவருடைய கணிப்பு, பந்தை அடித்த அவரது 'டைமிங்', அவரது உறுதி அனைத்துமே அந்த மூன்றாவது ஓவரிலேயே தெளிவாக வெளிப்பட்டது.
சாம்சனின் அந்த அதிரடி ஆட்டம் எந்த இடத்திலும் தொய்வடையாமல் தொடர்ந்தது. ஒவ்வொரு பௌலரின் பந்துவீச்சிலுமே அவர் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் அடித்துக்கொண்டே இருந்தார்.
அதிலும், குறிப்பாக ஒவ்வொரு பௌலரையும் தான் சந்திக்கும் முதல் பந்திலேயோ, இரண்டாவது பந்திலேயோவே பவுண்டரி/சிக்ஸர் அடித்து நெருக்கடி ஏற்படுத்தப் பார்த்தார் சாம்சன்.
ஆர்ச்சர் தவிர்த்து அனைத்து பௌலருக்கு எதிராகவும் அப்படித்தான் ஆடினார்.
அதுமட்டுமல்லாமல், பெரும்பாலான ஓவர்களில் தான் சந்தித்த முதல் பந்திலேயே அவர் பவுண்டரியோ சிக்ஸரோ அடிக்க முயற்சி செய்தார்.
இது ஒவ்வொரு பௌலரையும் ஆரம்பத்தில் இருந்தே நெருக்கடிக்குத் தள்ளியது. பெரும்பாலான போட்டிகளில் பவர்பிளேவில் ஆர்ச்சர் அல்லது ஜேக்ஸ் இருவரில் ஒருவரை மூன்று ஓவர்கள் வரை பயன்படுத்திக்கொண்டிருந்த ஹேரி ப்ரூக்கை உடனடியாக வேறு திட்டங்களுக்கு நகர வைத்தது.
அந்த தொடர் அதிரடியின் காரணமாக பவர்பிளேவிலேயே 67/1 என்ற பெரிய ஸ்கோரை பதிவு செய்தது இந்தியா.
தொடர்ச்சியாக 180+ ஸ்டிரைக் ரேட்டிலேயே ஆடிய சாம்சன் 26 பந்துகளிலேயே அரைசதம் கடந்தார். அதன்பிறகும் தன் அதிரடியைத் தொடர்ந்த அவர், 42 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழக்கும்போது, 13.1 ஓவர்களில் இந்தியாவின் ஸ்கோர் 160/3. அப்போதே ஆட்டத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்தியிருந்தது இந்தியா.
இந்திய அணியின் முடிவும், வீரர்களின் பங்களிப்பும்
Getty Images
இந்தப் போட்டியில் இந்திய அணி எடுத்த ஒரு முடிவுமே அவர்கள் பெரிய ஸ்கோர் எடுப்பதற்குக் காரணமாக இருந்தது.
பத்தாவது ஓவரில் ஆதில் ரஷீத் பந்துவிச்சில் இஷன் கிஷன் அவுட் ஆனதும், ஷிவம் துபேவை நான்காவது வீரராகக் களமிறக்கியது இந்தியா. வழக்கமாக அந்த இடத்தில் சூர்யகுமார் யாதவ்தான் ஆடுவார். ஆனால், துபே ஸ்பின்னர்களுக்கு எதிராக நன்றாக விளையாடுவார் என்பதால், ரஷீத் ஓவரை டார்கெட் செய்யும் நோக்கோடு துபேவைக் களமிறக்கியது இந்தியா.
துபேவும் இந்தியாவின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது போலவே விளையாடினார். தன் முதல் இரண்டு ஓவர்களில் ரஷீத் 13 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்திருந்தார்.
இந்த இன்னிங்ஸில் இந்திய பேட்டர்களை கட்டுக்குள் வைத்திருந்த ஒரே இங்கிலாந்து பௌலரான அவரது மூன்றாவது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் விளாசினார் துபே. ரஷீத்தின் நான்காவது ஓவரிலுமே கூட அவர் ஒரு சிக்ஸர் அடித்தார்.
அதுமட்டுமல்லாமல், சாம்சன் கொடுத்த அதிரடியான தொடக்கத்தை மற்ற வீரர்களுமே நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். அவர்களும் மற்றொரு பக்கம் அதிரடியைத் தொடர்ந்துகொண்டே இருந்ததால் இந்திய அணியின் ரன்ரேட் தொடர்ச்சியாக 11 ரன்களுக்கு மேலேயே இருந்தது.
வந்த அனைத்து பேட்டர்களுமே முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடும் நோக்கத்தில்தான் ஆடினார்கள். அபிஷேக் ஷர்மாவைத் தவிர்த்து, அவுட் ஆன மற்ற 6 பேட்டர்களுமே 170+ ஸ்டிரைக் ரேட்டில் தான் ஆடினார்கள்.
அதேபோல், அபிஷேக் தவிர்த்து அனைவருமே குறைந்தபட்சம் ஒரு சிக்ஸராவது அடித்தார்கள்.
கடைசி இரு ஓவர்களில் திலக் வர்மாவும், ஹர்திக் பாண்ட்யாவும் சேர்ந்து 5 சிக்ஸர்கள் அடிக்க, அப்போது 36 ரன்கள் எடுக்கப்பட்டன. இங்கிலாந்து அணி இறுதியில் 7 ரன்களில் தான் தோற்றது எனும்போது, இந்த இரண்டு ஓவர்கள் இந்தியாவுக்கு எவ்வளவு சாதகமாக அமைந்தன என்பதை உணர முடியும்.
இந்த தொடர் அதிரடியின் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது இந்திய அணி. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு அணி எடுத்த நான்காவது அதிகபட்ச ஸ்கோர் இது.
மிகப் பெரிய இலக்கை சேஸ் செய்த இங்கிலாந்து அணியும் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடியது.
அதனால், தவறான ஷாட்கள் ஆடி அந்த அணியின் பேட்டர்கள் தொடர்ச்சியாக அவுட் ஆனார்கள். பெரும்பாலான ஓவர்களில் முதல் பந்திலேயே பெரிய ஷாட் ஆட நினைத்தவர்கள், பந்தை சரியாகக் கணிக்காமல் அடித்து வெளியேறினார்கள்.
இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரின் முதல் பந்து... ஹர்திக் பாண்ட்யா நன்கு ஆஃப் சைட் வெளியே வீசிய பந்தின் ஸ்விங்கை சரியாகக் கணிக்காமல் பெரிய ஷாட் ஆடச் சென்ற ஃபில் சால்ட் எட்ஜ் ஆகி கேட்ச் ஆனார்.
அதேபோல், ஐந்தாவது ஓவரின் முதல் பந்து... பும்ரா இந்தப் போட்டியில் வீசும் முதல் பந்து. அந்த முதல் பந்திலேயே தூக்கி அடித்தார் இங்கிலாந்து கேப்டன் ஹேரி ப்ரூக். ஆனால், பும்ரா வீசிய 'ஸ்லோ பால்' அவரை ஏமாற்றியது. சரியாகக் கணிக்காமல் ப்ரூக் தூக்கி அடித்த பந்தை, அக்ஷர் பட்டேல் பின்னால் ஓடிச் சென்று மிகச் சிறப்பாகப் பிடித்தார்.
இதேபோலத்தான் ஒரு பெரிய ஷாட் அடிக்கப்போய் ஆட்டமிழந்தார் ஜாஸ் பட்லர்.
வருண் சக்கர்வர்த்தி வீசிய இன்னிங்ஸின் ஆறாவது ஓவரின் முதல் மூன்று பந்துகளிலுமே ஜேக்கப் பெத்தேல் சிக்ஸர்கள் அடித்தார்.
நான்காவது பந்தில் அவர் சிங்கிள் அடிக்க, ஸ்டிரைக்குக்கு வந்தார் பட்லர். ஏற்கெனவே அந்த ஓவரில் 19 ரன்கள் வந்திருந்தது. அதிலும், பவர்பிளேவின் கடைசி 2 பந்துகள். அப்படியிருந்தும் பட்லர் பெரிய ஷாட் ஆடச் சென்றார். வருண் சக்கர்வர்த்தியின் கூக்ளியை சரியாகக் கணிக்காமல் அவர் சுற்றிப் பந்தை விட ஸ்டம்புகள் தகர்ந்தன.
Getty Images கடைசி வரை போராடிய ஜேக்கப் பெத்தேல்
ஆட்டத்தின் ஐந்தாவது ஓவர் களத்துக்குள் வந்த ஜேக்கப் பெதெல், கடைசி ஓவர் வரை போராடினார். ஆட்டம், கடைசி கட்டம் வரை செல்வதற்கும் மிகமுக்கியக் காரணமாக இருந்தார்.
மிகவும் தைரியமாக ஆடிய பெத்தேல், பெரும்பாலான பேட்டர்கள் கவனமாக ஆடும் பௌலர்களை தைரியமாக அடித்து ஆடினார்.
தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே (பும்ரா வீசிய பந்து) சிக்ஸர் அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார் அவர். வருண் சக்கர்வர்த்தி போன்ற ஒரு மிஸ்டிரி பௌலர் இந்தப் போட்டியில் வீசிய முதல் மூன்று பந்துகளிலுமே சிக்ஸர் அடித்தார். ஹர்திக், வருண், அர்ஷ்தீப் என அனைத்து பௌலர்களின் பந்துவீச்சையுமே அடித்து ஆடினார்.
சீனியர் பேட்டர்கள், பந்துகளைத் தவறாகக் கணித்து ஒருபக்கம் அவுட் ஆகிக்கொண்டிருக்க, பெத்தேல் தன் ஆட்டத்தில் முதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.
ஓரிரு பவுண்டரிகள் தொடர்ச்சியாக அடிக்கும்போது, உடனடியாக ஸ்டிரைக்கை ரொடேட் செய்தார். எல்லா ஷாட்களையும் அவர் பலமாக அடிக்கவில்லை. எப்போதெல்லாம் இரு ஃபீல்டர்களுக்கு இடையே இடைவெளியைப் பார்த்தாரோ, அந்த இடங்களைக் குறிவைத்து பவுண்டரிகள் அடித்தார்.
19 பந்துகளில் அரைசதம் கடந்த பெத்தேல் , 45 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவை என்ற நிலை வந்ததால் இரண்டாவது ரன்னுக்கு ஆசைப்பட்டு அவுட் ஆனார்.
மற்றபடி அவர் எந்த பௌலருக்கும் ஒரு வாய்ப்பு கூட உருவாக்கவில்லை. அந்த அளவுக்கு முழுமையாக இருந்தது அவருடைய ஆட்டம். இறுதியில் 48 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் அவர்.
Getty Images பெரும் தாக்கம் ஏற்படுத்திய ஜஸ்ப்ரித் பும்ரா
மொத்தம் 499 ரன்கள் இந்தப் போட்டியில் அடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது சரிசரியாக ஓவருக்கு 12.475 ரன்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இதில் பந்துவீசிய 12 பௌலர்களில் பத்து பேர் ஓவருக்கு சராசரியாக 10 ரன்களுக்கு மேல் கொடுத்தனர். மீதமிருக்கும் இரு பௌலர்களில் ஒன்பதுக்கும் குறைவான எகானமி வைத்திருக்கும் ஒரே பௌலர் - பும்ரா தான்.
இந்தப் போட்டியில் அவர் வீசிய முதல் பந்திலேயே இங்கிலாந்தின் முக்கிய பேட்டரான ஹேரி ப்ரூக் விக்கெட்டை வீழ்த்தினார். அதுவே ஆட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதேபோல், கடைசி 3 ஓவர்களில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 45 ரன்கள் தேவை என்ற நிலையில், 18-வது ஓவர் பந்துவீச வந்து வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார் அவர். கடைசி கட்டத்தில் அது இங்கிலாந்துக்கு பெறும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அந்த அணி இறுதி இரு ஓவர்களில் இலக்கை எட்ட முடியாமல் போனதற்கு அது மிகவும் முக்கியக் காரணமாக அமைந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு