நடுக்கடலில் தவிக்கும் 15,000 சுற்றுலாப் பயணிகள்… களமிறங்குகிறதா அமெரிக்கக் கடற்படை?… ஐ.நா விடுத்துள்ள அபாய எச்சரிக்கை..!!!
SeithiSolai Tamil March 06, 2026 04:48 PM

மத்திய கிழக்கில் நிலவும் கடுமையான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா கடற்பரப்பில் சுமார் 20,000 மாலுமிகள் மற்றும் 15,000 சுற்றுலாப் பயணிகள் வெளியேற முடியாமல் தவித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச கடல்சார் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் இடையிலான மோதலால், உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.

இதன் விளைவாக, ஏராளமான சரக்கு மற்றும் சுற்றுலா கப்பல்கள் நடுக்கடலில் முடங்கியுள்ளன. போர் தொடங்கிய கடந்த சனிக்கிழமை முதல் இதுவரை 7 கப்பல் விபத்துகள் பதிவாகியுள்ளன; இதில் இருவர் உயிரிழந்துள்ளதோடு, ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழல் சர்வதேச அளவில் பெரும் பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் டாங்கர்களின் எண்ணிக்கை 90 சதவீதம் வரை குறைந்துள்ளதால், கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. “அப்பாவி மாலுமிகள் மீதான தாக்குதல்களை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது” என்று தலைவர் டோமிங்குவேஸ் தெரிவித்துள்ள நிலையில், தேவைப்பட்டால் வணிகக் கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு வழங்கும் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.