இனி கமிஷன் கிடையாது… உணவு டெலிவரி துறையில் அதிரடியாக குதித்த ரேபிடோ… ஹோட்டல் விலையிலேயே இனி வீட்டிற்கு வரும் உணவு..!!!
SeithiSolai Tamil March 06, 2026 10:48 PM

பைக் மற்றும் கார் வாடகை சேவை துறையில் முன்னணியில் உள்ள ரேபிடோ நிறுவனம் தற்போது ஆன்லைன் உணவு டெலிவரி துறையிலும் கால்பதித்துள்ளது. இதற்காக ஓன்லி என்ற பெயரில் புதிய செயலியை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பொதுவாக இந்தத் துறையில் உள்ள பிற நிறுவனங்கள் உணவகங்களிடம் இருந்து இருபது முதல் முப்பது சதவீதம் வரை கமிஷன் தொகையை வசூலிக்கும் நிலையில் ரேபிடோ நிறுவனம் எந்தவித கமிஷனும் இன்றி இந்தச் சேவையை வழங்குகிறது.

முதற்கட்டமாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மார்ச் மாதம் மூன்றாம் தேதி முதல் நகரம் முழுவதும் இந்தச் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கமிஷன் இல்லாத காரணத்தால் உணவகங்கள் தங்கள் மெனு விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என்பதால் வாடிக்கையாளர்கள் உணவகங்களில் விற்கும் அதே விலையிலேயே உணவை இந்தச் செயலி மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

டெலிவரி கட்டணத்தை மட்டும் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கும் இந்த நிறுவனம் பிளாட்பார்ம் கட்டணம் உள்ளிட்ட மறைமுகக் கட்டணங்கள் எதையும் விதிப்பதில்லை. ஏற்கனவே தன்னிடம் உள்ள மிகப்பெரிய பைக் டாக்ஸி கட்டமைப்பை உணவு டெலிவரிக்கும் ரேபிடோ பயன்படுத்திக் கொள்கிறது.

தற்போது பெங்களூருவில் சுமார் இருபதாயிரம் உணவகங்கள் இந்தத் தளத்தில் இணைந்துள்ள நிலையில் இந்தச் செயலி ஆப்பிள் மற்றும் கூகுள் தளங்களில் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. ஸ்விகி மற்றும் ஜொமாடோ போன்ற நிறுவனங்களுக்குப் போட்டியாகக் களமிறங்கியுள்ள இந்தச் சேவை விரைவில் சென்னை உள்ளிட்ட பிற முக்கிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.