தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ளது. இந்த சூழலில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக தீவிரப்படுத்தியுள்ளது. டி.ஆர்.பாலு தலைமையிலான 07 பேர் கொண்ட குழு கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அதன்படி, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் 12 தொகுதிகள் வரை எதிர்பார்ப்பதாகவும், ஆனால், ஏற்கெனவே மாநிலங்களவை சீட் வழங்கியதைக் குறிப்பிட்டு, அக்கட்சிக்கு 02 தொகுதிகள் வழங்க திமுக முன்வருவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து மநீம ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த நிலையில், ஆலோசனைக் குறித்தும், தொகுதி பங்கீடு, போட்டியிடும் சின்னம் குறித்தும் செய்தியாளர்கள் கமல் ஹாசனிடம் கேள்வி எழுப்பினர். அதாவது; ''தனிச் சின்னத்திலா அல்லது உதயசூரியன் சின்னத்திலா போட்டியிடுகிறீர்களா..?'' என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், ''கூடுதல் தொகுதிகள் குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். திமுகவின் அழைப்பிற்காக காத்திருக்கிறோம். தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய தயாராக இருக்கிறோம்.
எங்கள் சின்னத்திலா அல்லது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதா என்பதைக் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. ஆலோசனை முடிந்து தெரிவிப்போம்'' என்று பதிலளித்துள்ளார்.