சசிகலா புதிய கட்சிப் பெயர் அறிவிப்புக்கு முன்பே அலுவலகம் திறப்பு – மானாமதுரை அருகே அவரது, ஆதரவாளர்கள் கொடி ஏற்றினர் !
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கட்சியின் அலுவலகங்களை திறக்க திட்டமிட்டு இருப்பதாகவும், கூட்டணியை அறிவித்து 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க இலக்கு வைத்துள்ளோம் என ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க.,வில் நிகழ்ந்த மாற்றங்கள்
2016ம் ஆண்டு தொடர்ந்து இரண்டாவது முறையாக அ.தி.மு.க., ஆட்சி அமைந்த நிலையில் அந்தாண்டு டிசம்பர் மாதம் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா காலமானார். இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவும், முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும் இருந்தார். இதற்கிடையில் 2017 பிப்ரவரியில் சசிகலாவை முதலமைச்சராக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில் அவர் சொத்து குவிப்பு வழக்கில் சிறை செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதே சமயம் சசிகலாவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் நிற்க, அவருக்கு பதிலாக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். சசிகலா சிறை சென்ற பிறகு காட்சிகள் மாறின. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இணைந்து சசிகலாவை கட்சியை விட்டு நீக்கினர். நான்கரை ஆண்டுகாலம் இரண்டு பேரின் தலைமையின் கீழ் அதிமுக ஆட்சி நடந்தது. ஆனால் 2022ம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை கட்சியை விட்டு நீக்கினார். 3 ஆண்டுகாலம் சட்டப்போராட்டம், பல வகைகளில் கோரிக்கை விடுத்தும் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் தரப்பை மீண்டும் இபிஎஸ் கட்சியில் சேர்க்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைய, சசிகலா புதிதாக கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். அதற்காக சசிகலா தலைமையில் ராமநாதபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் மத்த்தியில் எண்ணத்தை வெளிப்படுத்தினார். கொடியை வெளியிட்ட அவர், கட்சியின் பெயரை விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் புதிய கட்சி பெயர் அறிவிப்புக்கு முன்பே அலுவலகம் திறந்து, கொடி ஏற்றியுள்ளனர் ஆதரவாளர்கள்.
சசிகலா ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தைத் தொடங்கி கொடியை ஏற்றி வைத்தனர்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே, V. K. சசிகலா தொடங்க உள்ளதாக கூறப்படும் புதிய கட்சியின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே, ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தைத் தொடங்கி கொடியை ஏற்றி வைத்தனர். சசிகலாவின் ஆதரவாளரான குரு முருகானந்தம், திலகராஜ் உள்ளிட்டோர் இணைந்து புதிய கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து, கட்சிக் கொடியையும் ஏற்றி வைத்தனர். இதற்கு முன்பு, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில், சசிகலா தனது புதிய கட்சியை தொடங்க உள்ளதாகவும், அதற்கான கொடியையும் அறிமுகப்படுத்தியிருந்தார். மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கட்சியின் அலுவலகங்களை திறக்க திட்டமிட்டு இருப்பதாகவும், கூட்டணியை அறிவித்து 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க இலக்கு வைத்துள்ளோம்” என ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.