ஒரு காவலர் செய்யுற வேலையா இது..! சென்னை காவலர் இடைநீக்கம்..!
Top Tamil News March 07, 2026 09:48 AM

சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவர் சூர்யா. இவர் நேற்று இரவு ராயப்பேட்டை பகுதியில் பணியில் இருந்தபோது, சீருடையுடன் மதுபோதையில் அங்குள்ள ஒரு பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் திடீர் செயலால் அந்தப் பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.


வீட்டிற்குள் நுழைந்த காவலர் சூர்யா, அந்தப் பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதாகத் தெரிகிறது. இதனால் தற்காப்பிற்காக அந்தப் பெண் காவலரைத் தள்ளிவிட்டுள்ளார். இதில் மதுபோதையில் இருந்த சூர்யா நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். உடனே அந்தப் பெண் தனது செல்போனில் காவலரை வீடியோ எடுத்ததுடன், வீட்டை விட்டு வெளியே வந்து கதவைப் பூட்டி அவரைச் சிறைபிடித்துள்ளார்.


பாதிக்கப்பட்ட பெண் அக்கம் பக்கத்தினரிடம் நடந்ததைக் கூறவே, பொதுமக்கள் அங்கு திரண்டனர். வீட்டிற்குள் மதுபோதையில் இருந்த காவலரைப் பிடித்து வைத்த மக்கள், உடனடியாக ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சூர்யாவை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது மற்றும் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட புகாரின் அடிப்படையில், காவலர் சூர்யாவைப் பணியிடை நீக்கம் (Suspend) செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சீருடையுடன் இருந்தபோதே இத்தகைய செயலில் ஈடுபட்டது காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "புகாரின் அடிப்படையில் சூர்யா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண் அளித்த வீடியோவை ஆய்வு செய்தபோது, அதில் அத்துமீறல் காட்சிகள் நேரடியாகப் பதிவாகவில்லை. இருப்பினும், முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது; தவறு உறுதி செய்யப்பட்டால் அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளனர். காவலரே பெண்ணிடம் அத்துமீற முயன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.