மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) அலுவலகத்தில் அரங்கேறியுள்ளதாகக் கூறப்படும் ஒரு வினோதமான மற்றும் அதிர்ச்சிகரமான சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பணியாற்றும் ஒரு இந்துப் பெண், ரம்ஜான் நோன்பு கடைபிடித்தது மற்றும் அவரது மத நடைமுறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து எழுந்த சந்தேகத்தைத் தொடர்ந்து, அந்த அலுவலகத்திற்குள் ஒரு மிகப்பெரிய ‘மதமாற்ற வலை’ செயல்பட்டு வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது வெறும் தனிப்பட்ட விவகாரம் மட்டுமல்லாமல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் கட்டாய மதமாற்றத் தூண்டுதல் தொடர்பான 9 எஃப்.ஐ.ஆர்-கள் வரை நீண்டுள்ளது.
இந்த விவகாரத்தில் போலீசாரின் புலனாய்வு முறை சினிமா பாணியில் அமைந்துள்ளது. அலுவலகத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை ரகசியமாகக் கண்டறிய, நாசிக் காவல்துறை அதிகாரிகள் தூய்மைப் பணியாளர்கள் (Cleaners) போல வேடமிட்டு உள்ளே சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு சில மூத்த ஊழியர்கள், சக பெண் ஊழியர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதுடன், அவர்களை இஸ்லாம் மதத்திற்கு மாற வற்புறுத்தியதாகவும், அதற்கு உடன்படாதவர்களைத் தனிமைப்படுத்தி மனரீதியாகத் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, ஒரு பெண் ஊழியர் புர்கா அணிந்ததும், ‘கல்மா’ ஓதியதும் சக ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, டிசிஎஸ் நிறுவனத்தின் மூத்த எச்ஆர் (HR) மேலாளர் அஸ்வினி சைனானி உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் 70-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் மூலம் எச்ஆர் துறையிடம் புகார் அளித்தும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்ததே இவ்வளவு பெரிய பாதிப்பிற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. டிசிஎஸ் நிறுவனம் தற்போது சம்பந்தப்பட்ட எட்டு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளதுடன், இது குறித்து ஒரு விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.