முற்றுகை அறிவிக்கப்பட்டு ஒருநாள்கூட முடியாத நிலையில் ஹார்முஸிலிருந்து வெளியேறிய கப்பல்கள்; தடுக்க முடியாமல் நிண்றுகிறதா அமெரிக்கா..?
Seithipunal Tamil April 15, 2026 06:48 AM

ஈரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இரு நாடுகளுக்கு இடையில் நிரந்தர போர் நிறுத்தம் தொடர்பாக பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியில் அனைத்துக் கப்பல்களையும் அமெரிக்கா முற்றுகையிடும் நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை, நேற்று இரவு 07;30 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்காக அமெரிக்க ராணுவம் ஈரானின் தெற்குக் கடல் பகுதியில் இருந்து 200 கிமீ தொலைவில் ஓமன் வளைகுடாவில் அணு ஆயுதம் தாங்கிய ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலையும் அத்துடன் மேலும் 02 போர்க் கப்பல்களையும் நிறுத்தியுள்ளது.

ஆனாலும், அமெரிக்காவின் இந்த முற்றுகை நடவடிக்கை தோல்வியுற்றிருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். முன்னதாக, ’ரிச் ஸ்டாரி’ என்ற நடுத்தர அளவு கொண்ட சீனாவின் எண்ணெய் கப்பல், இன்று ஹார்முஸ் பகுதியை வெற்றிகரமாகக் கடந்து, தற்போது ஓமன் வளைகுடாவில் உள்ளது. அதாவது, மலாவி நாட்டுக் கொடியின்கீழ் பயணித்த அந்தக் கப்பலில் சீனக் குழுவினர் இருப்பதாக அறிவித்த பிறகு, அது ஹார்முஸ் வழியைக் கடந்துள்ளது. 

அமெரிக்க ராணுவ முற்றுகைக்குக் கடந்த முதல் கப்பல் இதுஆகும். இது, அமெரிக்காவுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. இந்நிலையில், மேலும் சில கப்பகல்கள் இந்த வழிப்பாதையைக் கடந்திருப்பதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ட்ரம்பின் எச்சரிக்கையை மீறி, ஈரானுடன் தொடர்புடைய நான்கு எண்ணெய்க் கப்பல்களும் ஒரு சரக்குக் கப்பலும் ஹார்முஸைக் கடந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பனாமா கொடியை ஏந்திய 'பீஸ் கல்ஃப்', மடகாஸ்கர் கொடியை ஏந்திய முர்லிகிஷன், லைபீரியக் கொடியை ஏந்திய 'எல்பிஸ்’உள்ளிட்ட 05 கப்பல்கள் வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த கப்பல்கள், ஈரானிய துறைமுகத்திலிருந்து புறப்பட்டபோதிலும், அவற்றை அமெரிக்கக் கடற்படை இடைமறிக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது.

அதேநேரத்தில், இந்தக் கப்பல்கள் தங்கள் இருப்பிடங்களை மறைப்பதற்காக, 'ஸ்பூஃபிங்' எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம் தவறான இருப்பிட அறிக்கைகளை ஒளிபரப்பியிருக்கக்கூடும் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், அமெரிக்கா சக்தி வாய்ந்த முற்றுகை நடவடிக்கையை மீறி, 05 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்திருப்பது அதிபர் ட்ரம்புக்கு மேலும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இது தவிர, அமெரிக்காவின் ராணுவ பலமும் கேள்விக்குறியாகியுள்ளது. ஏற்கெனவே சீனாவின் முதல் கப்பல் சென்ற நிலையில், ஈரான் அமெரிக்காவை மோசமாக கேலி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.