நாடு முழுவதும் நள்ளிரவில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை திடீரென கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் மட்டுமல்லாமல், வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் விலை உயர்வு காரணமாக பல்வேறு உணவு பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்து வருவதால் சிலிண்டர், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க: உங்களிடம் ரூ.2000 நோட்டுகள் இருக்கா? ஈஸியா மாத்தலாம் – ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு
மார்ச் 1ல் தான் சிலிண்டர் விலை உயர்ந்தது:ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில் மார்ச் மாத முதல் நாள் தான் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது. அதாவது, பிப்ரவரி 28, 2026 வரை ரூ.1,899க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கேஸ் சிலிண்டர் விலை மார்ச் 1ம் தேதி ரூ.29.50 உயர்த்தப்பட்டு ரூ.1,929க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த விலை உயர்வு அமலாகி சரியாக ஒரு வாரத்திற்குள் தற்போது மீண்டும் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை:அதன்படி, 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டரின் விலை இன்று ஒரே நாளில் ரூ.114.50 உயர்ந்துள்ளது. ஏற்கெனவே, மார்ச் 1ம் தேதி ரூ.29.50 உயர்த்தப்பட்ட நிலையில், இன்று முதல் மேலும் ரூ.114.50 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 1ம் தேதி முதல் நேற்றைய தினம் வரை (மார்ச் 6) ரூ.1,929க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சிலிண்டரின் விலை தற்போது ரூ.2,043க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி 7 நாட்களில் மட்டும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.143.50 விலை உயர்ந்துள்ளது. இது வியாபாரிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை:மார்ச் மாத தொடக்கத்தில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டாலும், வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. இதனால், பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். ஆனால், தற்போது அதற்கு சேர்த்து வைத்து, வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ஒரே நாளில் ரூ.60 கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி, 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.868க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ரூ.60 உயர்ந்து, இன்று முதல் ரூ.928க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படுமா?.. அதிகாரிகள் கூறுவது என்ன?
ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம்:ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா இடையே போர் நடந்து வருவதால், மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதலை தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது. இதனால், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விணியோகம் தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா குறுகிய காலத்திற்கு ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. இதனிடையே, இந்தியாவிடம் போதுமான அளவு கச்சா எண்ணெய், எல்பிஜி கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.