இந்தியா - நியூசிலாந்து அணிகள் 2026 டி20 உலகக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் நாளை (மார்ச் 8) விளையாடவுள்ள நிலையில், யார் இந்த போட்டியில் வெற்றி பெறுவார் என்பது குறித்த ஜோதிட கணிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி 7ம் தேதி 2026ம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கியது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை,மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன், நேபால், ஐக்கிய அரபு அமீரகம், ஸ்காட்லாந்து, அமெரிக்கா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, கனடா என 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடியது.
இதன் முடிவில் சூப்பர் 8 பிரிவுக்கு இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஜிம்பாப்வே, இலங்கை, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 8 அணிகள் சென்றது. இதில் அரையிறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் சென்றது. அரையிறுதியில் தென்னாபிரிக்காவை நியூசிலாந்தும், இங்கிலாந்து அணியை இந்தியாவும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி மார்ச் 8ம் தேதி குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று எப்படியாவது சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என இரு அணி வீரர்களும் மல்லுகட்டி வருகின்றனர்.
இரு அணிகளும் பலம் பொருந்தியவை என்பதால் யார் ஜெயிக்கப்போகிறார் என்பது கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடைபெறலாம் என்பதால் பலரும் பலவித கணிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் ஜோதிட ரீதியாக பார்க்கும்போது இறுதிப்போட்டி நடைபெறும் ஞாயிற்றுக்கிழமை நாளின் கிரக நிலைகளை ஆராய்ந்து சிலர் ஜோதிட ரீதியிலான கணிப்புகளை ஜோதிடர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதனைப் பற்றிக் காணலாம்.
போட்டி நடைபெறும் நாளில் செவ்வாய் மற்றும் குருவின் செல்வாக்கு முக்கிய கிரக சேர்க்கைகளில் ஒன்றாகும். செவ்வாய் செய்யும் செயலில் வெற்றியையும் அர்ப்பணிப்பையும் குறிக்கிறது. அதேசமயம் குரு நம்பிக்கையை கொடுக்கிறார். எனவே இறுதிப்போட்டியில் இந்தியா தைரியமான முடிவுகளை எடுக்கும் என சொல்லப்பட்டுள்ளது. எனினும் ஆரம்பத்தில் அதிக ரன்கள் எடுப்பது இன்னும் சாதகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைதியான மற்றும் நேர்மையான அணுகுமுறை தான் நியூசிலாந்தின் பலமாக உள்ளது. ஜோதிட ரீதியாக சனியின் செல்வாக்கு தற்போது வலுவாக உள்ளதால் பொறுமை, கட்டமைப்பு மற்றும் உத்தி ஆகியவை சாதகமாக உள்ளது. நடுத்தர ஓவர்களில் அழுத்தம் கொடுத்தால் நிச்சயம் நியூசிலாந்து அணி வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ் முடிவு, முதல் ஒரு மணி நேரம் ஆட்ட நிலை ஆகியவை இரண்டு விஷயங்கள் மாற்றம் நிகழலாம் என சொல்லப்பட்டுள்ளது.