சென்னையில் நடைபெற்ற ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்திலான திரைப்படத் தொடக்க விழாவில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தமிழக அரசியல் மற்றும் சமூகச் சூழல் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர் ஒரு வேட்பாளர் தேர்தலுக்காகப் பதினைந்து கோடி ரூபாயை முதலீடு செய்கிறார் என்றால் அது மக்கள் சேவைக்காக அல்லாமல் லாப நோக்கத்திற்காகவே இருக்கும் என்று சாடினார். வாக்குக்குக் காசு கொடுக்கும் நிலை நிலவுவதால் ஜனநாயகம் என்பது அழிக்கப்பட்டு பணநாயகம் வலுவாக வேரூன்றிவிட்டதாக அவர் தெரிவித்தார்.
பணம் இருப்பவர்கள் மட்டுமே அதிகாரத்திற்கு வர முடியும் என்ற நிலை உருவானால் அது முதலாளிகளுக்கான ஆட்சியாகவே இருக்குமே தவிர உழைக்கும் மக்களுக்கான அதிகாரம் அங்கே இருக்காது என்று அவர் எச்சரித்தார்.
மேலும் கல்வி நிலையங்களில் அரசியல் பேசுவதற்குத் தடை விதிக்கும் அதே வேளையில் சினிமா பற்றிப் பேசுவதையும் திரைத்துறையினரை அழைப்பதையும் அரசு ஊக்குவிப்பதாகச் சீமான் வருத்தம் தெரிவித்தார். அரசு விழாக்களில் அறிஞர்களோ அல்லது கல்வியாளர்களோ பங்கேற்பதில்லை என்றும் அதற்குப் பதிலாகத் திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தைப் போலத் திரைக்கவர்ச்சியில் மூழ்கிய மாநிலம் வேறு எதுவுமில்லை என்று கூறிய அவர் இறைவழிபாட்டை விடத் திரைவழிபாடே இங்கு மேலோங்கி இருப்பதாகவும் சினிமா ஒரு பெரிய மதமாக மாறிவிட்டதாகவும் தனது பேட்டியில் குறிப்பிட்டார். மற்ற மாநிலங்களில் சினிமா இருந்தாலும் அங்குத் திரைத்துறையினர் ஆள முடிவதில்லை என்றும் ஆனால் தமிழகம் முழுமையாகத் திரைக்கவர்ச்சியில் சிக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.