தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவுக்கு, ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டை முதல்வர் ஸ்டாலின் ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த இடத்திற்கு தேமுதிக பொருளாளரும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதாவின் சகோதரருமான எல்கே சுதீஷ் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள சொத்து விவரப் பட்டியலின்படி, அவருக்கு ரூ.11.03 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.28.16 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன. மேலும், அவருக்கு ரூ.4.72 கோடி கடன் இருப்பதும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் தேமுதிகவின் எல்கே சுதீஷ் தவிர, திமுகவின் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கிறிஸ்டோபர் திலக் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இவர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தேமுதிகவுக்கு 6 முதல் 7 சட்டசபை தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், அதிமுக கூட்டணியில் அக்கட்சியின் தம்பித்துரை மற்றும் பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.