20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பரபரப்பான அரையிறுதி மோதலில் இந்திய அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் குவித்து பெரிய ஸ்கோரை பதிவு செய்தது.

254 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களம் இறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே தாக்குதல்மிகு ஆட்டம் ஆடி கடைசி ஓவர் வரை கடும் சவாலை ஏற்படுத்தியது. எனினும் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இந்த வெற்றி குறித்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவிக்கையில், “இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இன்னும் நம்ப முடியாத அனுபவமாக உள்ளது. சொந்த மண்ணில் இந்திய அணியை வழிநடத்தி இறுதிப் போட்டிக்குக் கொண்டு செல்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
சஞ்சு சாம்சன் இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பேட்டிங்கில் எந்த சூழலில் எப்படி விளையாட வேண்டும் என்பதில் அவருக்கு தெளிவான புரிதல் உள்ளது. தொடக்க வீரர்களிடம் இருந்து நாங்கள் எதிர்பார்ப்பது இப்படிப்பட்ட அதிரடியான தொடக்கமே.டாஸ் சமயத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி புருக்கிடம், ‘உங்கள் அணிக்கு எதிராக எவ்வளவு ஸ்கோர் வைத்தால் பாதுகாப்பாக இருக்கும்?’ என்று நகைச்சுவையாக கேட்டேன்.
ஏனெனில் அவர்கள் எப்போதும் எந்த இலக்கையும் துரத்தக்கூடிய திறன் கொண்டவர்கள்.ஆனால் எங்கள் பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு போட்டியை எங்கள் பக்கம் திருப்பினர்.
பும்ரா எவ்வளவு திறமையான பந்து வீச்சாளர் என்பதை அனைவரும் அறிந்ததே; இந்த போட்டியிலும் அவரது பந்துவீச்சு முக்கிய பங்கு வகித்தது.பீல்டிங்கிலும் வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் செயல்பட்டனர். அதற்காக பீல்டிங் பயிற்சியாளர் திலீப்பிற்கு பாராட்டுகள் தெரிவிக்க வேண்டும்.
அணியின் ஒவ்வொரு வீரரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக வழங்கினர்.பேட்டிங் வரிசையில் முதல் மூன்று வீரர்கள் மட்டுமே நிலையானவர்கள். அதன் பிறகு சூழ்நிலைக்கு ஏற்ப வரிசை மாற்றப்படும். ஆதில் ரஷீத் பந்து வீச வந்தபோது அவரை எதிர்கொள்ள ஷிவம் துபே தான் சரியான வீரர் என நாங்கள் முடிவு செய்தோம்.இந்த போட்டி முழுவதும் நான் மிகவும் பதற்றத்துடன் இருந்தேன்.
என் இதயத் துடிப்பு நிச்சயம் 160 முதல் 175 வரை சென்றிருக்கும்.போட்டி தொடங்குவதற்கு முன்பே மைதானத்தில் சுமார் 80 சதவீதம் ரசிகர்கள் நிரம்பியிருந்தனர். அவர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கை அளிக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.
இந்திய மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் இலக்குடன் நாங்கள் இறுதிப் போட்டிக்கு செல்கிறோம். அழுத்தம் இருக்கும். ஆனால் இறுதிப் போட்டியை எதிர்கொள்ள எங்கள் வீரர்களும் அணி நிர்வாகமும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்” என்று தெரிவித்தார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப் போட்டி வரும் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.