கோவை மாணவி கூட்டு பாலியல் வழக்கு… 3 பேருக்கு வாழ்நாள் சிறை.. மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
TV9 Tamil News March 07, 2026 10:48 PM

கோயம்புத்தூர் விமான நிலையத்தின் பின்புறம் கடந்த 2025 நவம்பர் 2- ஆம் தேதி இரவு காரில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் நண்பருடன் 21 வயதான கல்லூரி மாணவி பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள் அந்த ஆண் நண்பரை அடித்து துரத்தி விட்டு, அந்த கல்லூரி மாணவியை தாக்கியதுடன் அவரை தர தரவென இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது. இது தொடர்பாக, அந்த மாணவியின் ஆண் நண்பர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை

அதன்படி, இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்ற கருப்பசாமி ( 30 வயது), கார்த்திக் என்ற காளீஸ்வரன் ( 21 வயது), இவர்களது உறவினரான மதுரை மாவட்டம், கருப்பாயூரணியை சேர்ந்த குணா என்ற தவசி ( 20 வயது) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது, அவர்கள் தப்பியோட முயன்ற நிலையில், துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் 270 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேலும் படிக்க: சிலிண்டர் விலை – முன்பும் இப்போதும்.. விலை மாற்றம் ஏன்?

3 பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை

இத்துடன் சம்பவ இடத்திலிருந்து தடயங்கள், மரபணு பரிசோதனை முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள் மகளிர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன இதில், பல்வேறு தரப்பினரிடமிருந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இறுதி கட்டத்தை எட்டியது. அதன்படி, இன்று நீதிபதி சுந்தரராஜன் முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சதீஷ், கார்த்திக், குணா ஆகிய 3 பெரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த சம்பவத்தில் மூன்று பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு ரூ.7 லட்சமும், அந்த மாணவியின் ஆண் நண்பருக்கு ரூ.2 லட்சமும் நிவாரண நிதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சென்னை மின்வாரியம் அறிவிப்பு: மின்கட்டணம் செலுத்த முடியாது!

( தற்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் செய்தி வழங்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு டிவி9 தமிழுடன் இணைந்திருங்கள்)

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.