யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2025-ம் ஆண்டிற்கான
சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை வெளியிட்ட நிலையில், தரவரிசைப் பட்டியலில் 301-வது இடத்தைப் பிடித்தது யார் என்பதில் பெரிய குழப்பம் வெடித்துள்ளது. அகன்ஷா சிங் (Akanksha Singh) என்ற பெயருள்ள இரண்டு பெண் தேர்வர்கள், அந்த ரேங்க் தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியான பட்டியலில் 301-வது இடத்தில் அகன்ஷா சிங் என்ற பெயர் இடம்பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து, உத்திரப் பிரதேசம் காஸிபூரைச் சேர்ந்த ஒரு அகன்ஷா சிங்கும், பீகார் மாநிலம் அராவைச் சேர்ந்த மற்றொரு அகன்ஷா சிங்கும் "அது நான்தான்" எனக்கூறி வருகின்றனர். இருவரும் தங்களுடைய அட்மிட் கார்டு மற்றும் தேர்வு தொடர்பான ஆவணங்களை ஆதாரமாகக் காட்டி வருவதால், உண்மையில் தேர்ச்சி பெற்றது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொதுவாக இதுபோன்ற சமயங்களில் 'ரோல் நம்பர்' (Roll Number) தான் உண்மையான வெற்றியாளரைத் தீர்மானிக்கும். இருவரின் ஆவணங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, யாரோ ஒருவர் போலியான ஆவணங்களை வைத்திருக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. கடந்த ஆண்டுகளிலும் இதேபோன்று ஒரே பெயர் மற்றும் ஒரே மாதிரியான ரோல் நம்பர்களைக் காட்டி சிலர் குழப்பத்தை ஏற்படுத்திய சம்பவங்கள் நடந்துள்ளன.
தற்போது சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இது குறித்து யுபிஎஸ்சி நிர்வாகம் விரிவான விசாரணை நடத்தி, அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்தால் மட்டுமே இந்தச் சர்ச்சை முடிவுக்கு வரும்.
அதுவரை, வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்க வேண்டிய சூழலில், இந்த அடையாளச் சிக்கல் சம்பந்தப்பட்ட உண்மையான தேர்வரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.
முன்னதாக வெள்ளிக்கிழமை அன்று யுபிஎஸ்சி இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ மற்றும் குரூப் பி ஆகிய பணியிடங்களை நிரப்ப, நாடு முழுவதிலும் இருந்து 958 தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.