இரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமனெயி யார்? அரசியல் பின்புலம்
BBC Tamil March 09, 2026 10:48 AM
Tasnim News Agency

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட இரானின் ஆயதுல்லா அலி காமனெயியின் மகனான மொஜ்தபா காமனெயி, அடுத்த உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தந்தையைப் போலல்லாமல், 56 வயதான அவர் பெரிதாக அறியப்பட்டவர் அல்ல. அவர் ஒருபோதும் அரசாங்கப் பதவியை வகித்ததில்லை, பொது உரை அல்லது நேர்காணல்களை வழங்கியதில்லை, அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.

ஆனால் பல ஆண்டுகளாக இரானில் திரைக்குப் பின்னால் அவர் கணிசமான செல்வாக்கைக் கொண்டிருந்ததாக வதந்திகள் உள்ளன.

2000களின் பிற்பகுதியில் அமெரிக்க இராஜதந்திர நடவடிக்கைகள் பற்றி விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசியங்கள், அவரை "அங்கிகளுக்குப் பின்னால் உள்ள சக்தி" என்று விவரித்தன, அவர் ஆட்சிக்குள் "திறமையான மற்றும் வலிமையான" நபராக பரவலாகக் கருதப்பட்டதாக ஏ.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆயினும்கூட, அவரது தேர்வு இன்னும் சர்ச்சைக்குரியதாக இருக்கலாம். முடியாட்சி தூக்கியெறியப்பட்ட பிறகு 1979ஆம் ஆண்டு இஸ்லாமிய குடியரசு நிறுவப்பட்டது. அதன் சித்தாந்தம், பரம்பரை வாரிசுரிமை மூலம் அல்ல, மாறாக அவரது மத நிலைப்பாடு மற்றும் நிரூபிக்கப்பட்ட தலைமைத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் உச்ச தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது.

காமனெயி தனது ஆட்சிக் காலத்தில், இஸ்லாமிய குடியரசின் எதிர்காலத் தலைமை குறித்து பொதுவான சொற்களில் மட்டுமே பேசினார்.

உச்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கும் மதகுரு அமைப்பான இரான் நிபுணர்கள் சபையின் ஒரு உறுப்பினர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, காமனெயி தனது மகன் எதிர்காலத் தலைமைக்கான வேட்பாளராக இருப்பதற்கான யோசனையை எதிர்த்ததாகக் கூறினார். ஆனால் அவர் அத்தகைய ஊகங்களை ஒருபோதும் பகிரங்கமாகக் கூறியதில்லை.

EPA மொஜ்தபா கமேனி யார்?

செப்டம்பர் 8, 1969 அன்று இரானின் வடகிழக்கு நகரமான மஷாத்தில் பிறந்த மொஜ்தபா, காமனெயியின் ஆறு குழந்தைகளில் இரண்டாவது குழந்தை. அவர் டெஹ்ரானில் உள்ள மத அலவி பள்ளியில் இடைநிலைக் கல்வியைப் பெற்றார்.

17 வயதில், மொஜ்தபா இரான்-இராக் போரின் போது பல குறுகிய காலத்திற்கு இராணுவத்தில் பணியாற்றினார் என்று இரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எட்டு வருட இரத்தக்களரி மோதல்கள், இராக்கை ஆதரித்த அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் மீது இரான் ஆட்சியாளர்களை மேலும் சந்தேகப்பட வைத்தன.

1999ஆம் ஆண்டில், மோஜ்தபா தனது மதப் படிப்பைத் தொடர ஷியா இறையியலின் முக்கிய மையமாகக் கருதப்படும் புனித நகரமான கோமுக்கு சென்றார். இது வரை அவர் மதகுருமார்களின் உடைகளை அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனது 30 வயதில் ஒரு செமினரியில் கலந்து கொள்ள அவர் ஏன் முடிவு செய்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

சமீபத்திய நாட்களில், சில ஊடக நிறுவனங்களும் இரானில் உள்ள அதிகார மையங்களுக்கு நெருக்கமான அதிகாரிகளும் மொஜ்தபா காமனெயியை "ஆயதுல்லா" என்று குறிப்பிடத் தொடங்கியுள்ளனர், இது ஒரு மூத்த மதகுருமார் பட்டமாகும். இந்த மாற்றம் அவரது நிலையை உயர்த்தி அவரை நம்பகமான தலைவராகக் காட்டும் முயற்சியாக சில பார்வையாளர்களுக்குத் தோன்றுகிறது.

செமினரி அமைப்பில், "ஆயதுல்லா" பதவியை வகிப்பதும், உயர் வகுப்புகளுக்கு கற்பிப்பதும் ஒரு நபரின் கல்வி நிலை மற்றும் அறிவின் வெளிப்பாடாகக் கருதப்படுகின்றன. அவை எதிர்காலத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேவைகள் மற்றும் முன்நிபந்தனைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.

ஆனால் ஏற்கனவே ஒரு முன்னுதாரணமாக உள்ளது. 1989இல் இரண்டாவது உச்ச தலைவராக ஆன பிறகு காமனெயி விரைவில் "ஆயதுல்லா" ஆனார்.

West Asia News Agency Via Reuters அரசியல் தலையீடு குற்றச்சாட்டுகள்

2005 அதிபர் தேர்தலின் போது மொஜ்தபாவின் பெயர் முதன்முதலில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த தேர்தலில் தீவிரப் போக்காளராக அறியப்பட்ட மெஹ்மூத் அஹ்மதி நிஜாத் வெற்றி பெற்றார்.

காமனெயிக்கு எழுதிய பகிரங்க கடிதத்தில், இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) மற்றும் அஹ்மதிநிஜாத் வெற்றிபெற உதவும் வகையில் மதக் குழுக்களுக்கு பணத்தை விநியோகித்த பாசிஜ் குழு ஆகியவற்றின் மூலம் அதிபர் தேர்தலில் மொஜ்தபா தலையிட்டதாக சீர்திருத்தவாத வேட்பாளர் மெஹ்தி கரூபி குற்றம் சாட்டினார்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மொஜ்தபா மீண்டும் அதே குற்றச்சாட்டை எதிர்கொண்டார். அஹ்மதிநிஜாத்தின் மறுதேர்தல் நாடு முழுவதும் 'பசுமை இயக்கம்' என்று அழைக்கப்பட்ட வெகுஜன போராட்டங்களைத் தூண்டியது. மொஜ்தபா தனது தந்தைக்குப் பிறகு இரானின் உச்ச தலைவராக முடியும் என்ற கருத்தை எதிர்த்து சில போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.

அப்போதைய துணை உள்துறை அமைச்சர் முஸ்தபா தஜ்ஜாதே, இந்த முடிவை "தேர்தல் சதி" என்றார். அவர் ஏழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார், இதற்கு "மொஜ்தபா காமனெயியின் விருப்பமே" காரணம் என்று அவர் விமர்சித்தார்.

Getty Images

இரண்டு சீர்திருத்த வேட்பாளர்களான மிர்-ஹொசைன் மௌசவி மற்றும் மெஹ்தி கரூபி ஆகியோர் 2009 தேர்தலுக்குப் பிறகு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். பிப்ரவரி 2012 இல், மௌசவியை நேரில் சந்தித்து போராட்டத்தை கைவிடுமாறு மொஜ்தபா வலியுறுத்தினார் என்று இரானிய வட்டாரங்கள் பிபிசி நியூஸ் பாரசீகத்திடம் தெரிவித்தன.

இப்போது, இரானின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உச்ச தலைவராக, மொஜ்தபா தனது தந்தையின் கடும்போக்கான கொள்கைகளைத் தொடருவார் என்று பலர் எதிர்பார்க்கிறார்கள்.

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் தனது தந்தை, தாயார் மற்றும் மனைவியை இழந்த ஒருவர் மேற்கத்திய அழுத்தத்திற்கு அடிபணிய வாய்ப்பில்லை என்றும் சிலர் நம்புகிறார்கள்.

ஆனால், இஸ்லாமியக் குடியரசின் இருப்பை உறுதி செய்வதும், அரசியல் மற்றும் பொருளாதார பேரழிவிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்குத் தானே சரியான நபர் என்பதை பொதுமக்களை நம்ப வைப்பதும் அவருக்கு மிகவும் கடினமான பணியாகும்.

அவரது தலைமைத்துவம் பெரும்பாலும் சோதிக்கப்படாமல் உள்ளது. இஸ்லாமிய குடியரசு ஒரு பரம்பரை அமைப்பாக மாறி வருகிறது என்ற கருத்து பொதுமக்களின் அதிருப்தியை மேலும் ஆழப்படுத்தக்கூடும்.

மொஜ்தாபா இப்போது ஒரு குறிப்பிடத்தக்க மனிதர். ஆயதுல்லா அலி காமனெயியின் வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்படும் நபர் "அடுத்த இலக்காக" இருப்பார் என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் கடந்த வாரம் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.