மானாமதுரை அடுத்தடுத்து அதிர்ச்சி... போலீசார் தாக்கியதில் வாலிபர் மரணம் - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்!
Dinamaalai March 09, 2026 12:48 PM

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் உயிரிழந்த விவகாரம், தென் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் காவலில் நடந்த மரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து போலீசாரின் அடாவடித்தனம் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஏற்கெனவே காளி கோயில் பாதுகாவலர் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்பத்திய நிலையில், அடுத்த அதிர்ச்சியாக அதே சிவகங்கை மாவட்டத்தில் நடந்துள்ள இந்நிகழ்வு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் காலனியைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன் (26) என்பவர், படுகாயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 5ம் தேதி, மானாமதுரையைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் அழகர்சாமி ஆகிய இருவரை அறிவாளால் வெட்டிய வழக்கில் ஆகாஷ் டெலிசன் மற்றும் குணா ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். போலீசாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றபோது கீழே விழுந்ததில் ஆகாஷுக்கு கால் முறிவு ஏற்பட்டதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆகாஷின் மரணத்திற்குப் போலீசாரின் தாக்குதலே காரணம் என அவரது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்:

"உன் மகன் கையில் கிடைத்தால் கொன்றுவிடுவோம் என போலீசார் முன்பே மிரட்டினார்கள். இப்போது அதன்படியே கொன்றுவிட்டார்கள்" என தாய் ஆனந்தி வேதனை தெரிவித்துள்ளார்.

மகனைப் பிடிப்பதற்காகத் தங்களைச் சட்டவிரோதமாகக் காவல் நிலையத்தில் வைத்திருந்ததாகவும், ஆகாஷைக் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கற்களால் தாக்கி காலை உடைத்ததாகவும் தந்தை ராஜேஷ்கண்ணன் புகார் கூறியுள்ளார். மேலும், சாதிய ரீதியாகப் பேசி போலீசார் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகாஷ் டெலிசன் இறப்பிற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அவரது உறவினர்கள் நேற்று காலை 9:30 மணியளவில் மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். "நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம்" என அவர்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளதால், மதுரை அரசு மருத்துவமனை மற்றும் மானாமதுரை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.