’56 தொகுதிகளின் பட்டியல் தயார்’ மீண்டும் வேதாளமாக மாறும் காங்கிரஸ் – தலைவலியில் திமுக..?
அரூபி March 09, 2026 02:14 PM

பல்வேறு பிரச்னைகளுக்கு பின்னர் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளன. இருப்பினும், மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது மாதிரி காங்கிரஸ் தான் போட்டியிட விரும்பும் தொகுதிகளுக்கான பட்டியலை தயாரித்துள்ளது. மீண்டும் திமுகவிற்கு குடைச்சல் கொடுக்கும் வகையில், திமுக போட்டியிட நினைக்கும் தொகுதிகளையும் தங்களது விருப்ப தொகுதிகளாக திமுகவிடமே கேட்கவிருக்கிறது காங்கிரஸ் கட்சி.

56 தொகுதிகளின் பட்டியலை தயாரித்த காங்கிரஸ்

தாங்கள் போட்டியிட நினைக்கும் 28 இடங்களோடு சேர்த்து இன்னொரு 28 தொகுதிகளின் பட்டியலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தயாரித்துள்ளது. அதில், தாங்கள் கேட்கும் முதல் 28 தொகுதிகளையும் திமுகவால் தர முடியவில்லையென்றால் அடுத்த பட்டியலில் அதற்கு மாற்றாக உள்ள 28 தொகுதிகளில் இருந்து தொகுதிகளை தேர்வு செய்து காங்கிரஸ் கட்சி போட்டியிட தர வேண்டும் என திமுவிடம் காங்கிரஸ் வலியுறுத்தவிருக்கிறது. குறிப்பாக, ஏற்கனவே காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற தொகுதிகளை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக அந்த தொகுதிகளையும் தங்களுடைய பட்டியலில் இணைத்திருக்கிறது காங்கிரஸ். குறிப்பாக, சென்னையில் வேளச்சேரி, ஸ்ரீபெரம்பதூர், சோளிங்கர், மயிலாடுதுறை, அறந்தாங்கி, காரைக்குடி உள்ளிட்ட தொகுதிகளை தக்க வைத்துக்கொள்ள காங்கிரஸ் விரும்புவதாகவும் அதனடிப்படையில் அந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய தொகுதிகளையும் கேட்கும் காங்கிரஸ்

அதோடு, கடந்த முறை காங்கிரஸ் போட்டியிடாத தொகுதிகளையும் இந்த முறை திமுகவிடம் கேட்டு வாங்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. தொகுதிகளின் எண்ணிக்கையில் சமசரம் செய்துகொண்ட நிலையில், காங்கிரஸ் போட்டியிட விரும்பும் 28 தொகுதிகளில் சமரசம் செய்யாமல் அதனை கேட்டு வாங்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கிடம் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தொகுதிகளை கண்டறிவதில் மீண்டும் சிக்கல் ?

தொகுதி பங்கீட்டில் கடும் இழுபறிக்கு பின்னரே 28 தொகுதிகள் என முடிவு செய்யப்பட்ட நிலையில், புதுச்சேரியில் இப்போது திமுக – காங்கிரஸ் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் போட்டியிட விரும்பும் 28 தொகுதிகளை திமுகவிடம் கேட்டு பெறுவதிலும் கடும் இழுபறி ஏற்படும் என அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.