அகமதாபாத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை 2026 இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இந்த வெற்றியை மூன்று முக்கிய ஜாம்பவான்களுக்கு அர்ப்பணித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பிசிசிஐ சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (CoE) தலைவர் வி.வி.எஸ். லட்சுமண் மற்றும் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோருக்கு இந்த வெற்றிக் கோப்பையை அவர் சமர்ப்பித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியை ஒரு வலுவான நிலையில் விட்டுச் சென்றதற்காக ராகுல் டிராவிட்டிற்கும், பின்தங்கியிருந்து வருங்கால வீரர்களைத் தயார் செய்யும் பணிக்காக லட்சுமணிற்கும், கடும் விமர்சனங்களுக்கு மத்தியிலும் நேர்மையுடன் வீரர்களைத் தேர்வு செய்ததற்காக அகர்கருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
“>
மேலும், தனது பயிற்சியாளர் பயணத்தின் கடினமான காலங்களில் (நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விகளின் போது) தனக்குத் தொலைபேசியில் அழைத்து ஊக்கமளித்த ஒரே நபர் ஜெய் ஷா மட்டும்தான் என்றும் கம்பீர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
பயிற்சியாளராகவும் வீரராகவும் உலகக்கோப்பையை வென்ற பெருமையைப் பெற்றுள்ள கம்பீர், சமூக வலைதள விமர்சனங்களுக்குத் தான் பொறுப்பல்ல என்றும், தனது பொறுப்பு முழுவதும் டிரஸ்ஸிங் ரூமில் உள்ள 30 வீரர்களுக்கு மட்டுமே என்றும் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். 2025 சாம்பியன்ஸ் ட்ராபியைத் தொடர்ந்து, கம்பீரின் வழிகாட்டுதலில் இந்தியா தற்போது 2026 டி20 உலகக்கோப்பையையும் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.